
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது போட்டி நேற்று ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், டிம் சவுதி தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதின. இந்த போட்டியில் முதலாவதாக டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தீர்மானம் செய்தார்.
அதன்படி முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களை குவிக்க அடுத்ததாக விளையாடிய இந்திய அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டனர்.
குறிப்பாக புவனேஸ்வர் குமார், அஷ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், சிராஜ் மற்றும் சாகர் ஆகியோர் ஒரு விக்கெட் கைப்பற்றி அசத்தினர். இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடிய இந்திய அணியின் முன்னணி இளம் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் 4 ஓவர்கள் வீசி 39 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.