
இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த டி 20 கிரிக்கெட் தொடரில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. தொடர்ந்து குவாஹாட்டியில் நேற்று முன்தினம் நடைபெற்ற 2ஆவது ஆட்டத்தில் இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியது. இதன்மூலம் சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக முதன்முறையாக டி 20 கிரிக்கெட் தொடரை இந்தியா கைப்பற்றியது.
கவுஹாத்தியில் பேட்டிங்கில் இந்திய அணி அபாரமாக செயல்பட்டு 237 ரன்களை வேட்டையாடி இருந்தது. ஆனால் பந்து வீச்சில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தமுடியாமல் போனது. தென் ஆப்பிரிக்க அணி ஏறக்குறைய வெற்றியை நெருங்கிய நிலையிலேயே தோல்வியை சந்தித்தது. அந்த அணி பவர்பிளேவில் 45 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது. இறுதிக்கட்டத்தில் இது பெரிய அளவில் வித்தியாசத்தை ஏற்படுத்தியிருந்தது.
இன்று நடைபெறும் ஆட்டம் டி 20 உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்திய அணி பங்கேற்கும் கடைசி டி 20 போட்டி என்பதால் பந்துவீச்சில் மீண்டும் ஒரு சோதனை கட்டத்தை இந்திய வீரர்கள் எதிர்கொள்ளக்கூடும். ஏனெனில் பேட்டிங்கில் கேஎல்ராகுல், ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட டாப் ஆர்டர் வீரர்கள் அனைவருமே சிறந்த பார்முக்கு திரும்பிவிட்டனர். பந்து வீச்சு மட்டுமே இன்னும் வலுப்பெறாமல் உள்ளது.