Advertisement

WI vs IND: கடைசி இரண்டு டி20 போட்டிகள் நடைபெறுவதில் சிக்கல்!

அமெரிக்காவில் நடைபெற இருந்த டி20 போட்டிகளில் பங்கேற்க இரு நாடுகளைச் சேர்ந்த வீரர்களுக்காக விண்ணப்பிக்கப்பட்டிருந்த விசாவுக்கு அமெரிக்க அரசு இன்னும் அனுமதி வழங்காமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளதாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது

Bharathi Kannan
By Bharathi Kannan August 01, 2022 • 19:05 PM
India & West Indies players yet to get VISA, CWI planning to host last two T20s in Caribbean
India & West Indies players yet to get VISA, CWI planning to host last two T20s in Caribbean (Image Source: Google)
Advertisement

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் பங்கேற்று வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஷிகர் தவான் தலைமையில் இளம் வீரர்களுடன் அட்டகாசமாக செயல்பட்ட இந்தியா 3 – 0 என்ற கணக்கில் வரலாற்றிலேயே முதல் முறையாக வெஸ்ட் இண்டீசை அதன் சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் செய்து கோப்பையை முத்தமிட்டது. 

அதைத் தொடர்ந்து வரும் அக்டோபரில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் இவ்விரு அணிகளும் தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்ற 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.

Trending


இதையடுத்து இந்த தொடரின்  2ஆவது போட்டி இன்று இரவு 8 மணிக்கு செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் நகரில் இருக்கும் வார்னர் பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் வென்று இந்தியாவுக்கு தக்க பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்து சொந்த ரசிகர்களுக்கு முன் தலைநிமிர வெஸ்ட் இண்டீஸ் போராட உள்ளது.

இந்த தொடரின் 3ஆவது போட்டியும் இதே வார்னர் பார்க் மைதானத்தில் நாளை இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது. அதன் பின் நடைபெறும் கடைசி இரண்டு போட்டி வெஸ்ட் இண்டீஸில் அல்லாமல் பக்கத்தில் உள்ள அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் இருக்கும் லாடர்ஹில் மைதானத்தில் நடைபெற உள்ளது. வரும் 2024-ஆம் ஆண்டு நடைபெறும் ஐசிசி டி20 உலகக் கோப்பையை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய 2 கிரிக்கெட் வாரியங்களும் இணைந்து நடத்துவதற்கான உரிமையை பெற்றுள்ளன.

அந்த உலகக் கோப்பையின் ஆரம்ப கட்ட போட்டிகள் அமெரிக்காவில் உள்ள இந்த ஃப்ளோரிடா நகரில் இருக்கும் லாடர்ஹில் மைதானத்தில் தான் நடைபெற உள்ளது. எனவே அதற்கு வெள்ளோட்டம் பார்க்கும் வகையிலேயே இந்த தொடரின் கடைசி 2 போட்டிகளை அங்கு நடத்த இருநாட்டு வாரியங்களும் இணைந்து திட்டமிட்டு ஏற்கனவே அட்டவணையை அறிவித்துள்ளன. 

இந்நிலையில் அங்கு பயணிப்பதற்காக இரு நாடுகளைச் சேர்ந்த வீரர்களுக்காக விண்ணப்பிக்கப்பட்டிருந்த விசாவுக்கு அமெரிக்க அரசு இன்னும் அனுமதி வழங்காமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளதாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது. அந்த போட்டிகளுக்கு இன்னும் 4 நாட்கள் மட்டுமே இடைவெளி உள்ளதால் விசா கிடைப்பதற்கான தாமதம் மேலும் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் திட்டமிட்டபடி இரு அணிகளும் அமெரிக்காவுக்கு பயணித்து பயிற்சிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக இன்று அல்லது நாளைக்குள் நல்ல முடிவு வராவிட்டால் அந்த 2 போட்டிகளையும் வெஸ்ட் இண்டீஸ் மண்ணிலேயே நடத்துவதற்கு அந்நாட்டு வாரியம் விரைவில் முடிவெடுக்க உள்ளது. 

இது பற்றி வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரிய தலைவர் ரிக்கி ஸ்கெரிட் கூறுகையில்,“திட்டமிட்டபடி அங்கு போட்டிகள் நடைபெறாமல் போனால் அதை இங்கேயே நடத்துவதற்கு தேவையான வேலைகளில் ஈடுபட உள்ளோம். இருப்பினும் முடிந்தளவுக்கு வீரர்களுக்கான விசாவை வாங்குவதற்காக முயற்சித்து வருகிறோம்” என்று கூறினார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement