
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டி என்றால் அதன் மீதான எதிர்பார்ப்பும், அதற்கு கிடைக்கும் வரவேற்பும் வேற லெவலில் இருக்கும். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இருதரப்பு தொடரில் ஆடுவதில்லை. ஐசிசி தொடர்களில் மட்டுமே ஆடிவருகின்றன.
2012ஆம் ஆண்டுக்கு பின் இரு அணிகளும் இருதரப்பு தொடரில் விளையாடவில்லை. 2008ஆம் ஆண்டுக்கு பின் இந்திய அணி பாகிஸ்தானுக்கு சென்று கிரிக்கெட் ஆடவில்லை. இரு நாடுகளுக்கு இடையே நல்ல உறவு இல்லாததால் இந்திய அரசு, இந்திய அணியை பாகிஸ்தானுக்கு சென்று விளையாட அனுமதிக்கவில்லை.
ஆனால் இந்திய அணி பாகிஸ்தானுக்கு வந்து விளையாட வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் என அனைவருமே விரும்புகின்றனர். இதுதொடர்பாக பிசிசிஐ அதிகாரிகளுடன் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பலமுறை விருப்பம் தெரிவித்தது. ஆனால் பிசிசிஐ பிடி கொடுக்கவில்லை.