
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது தற்போது வெஸ்ட் இண்டீஸ்சில் நடைபெற்று வருகிறது. அதன்படி ஜூலை 22ஆம் தேதி நடைபெற்ற இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 308 ரன்கள் குவித்த வேளையில் 309 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது 305 ரன்கள் மட்டுமே குவித்ததால் மூன்று ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி திரில் வெற்றியை பெற்றது. அதோடு 3 போட்டிகள் கொண்ட இந்த ஒரு நாள் தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலையும் வகிக்கிறது.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி அதே குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்றைய போட்டியில் இந்திய அணியில் ஏதாவது மாற்றம் இருக்குமா என்று எதிர்பார்க்கப்படும் வேளையில் நிச்சயம் இந்திய அணியில் ஒரு மாற்றத்தை செய்தாக வேண்டும் என ரசிகர்கள் மத்தியில் தற்போது கோரிக்கை எழுந்து வருகிறது.
அந்த வகையில் இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான பிரசித் கிருஷ்ணாவிற்கு பதிலாக அறிமுக வீரராக அர்ஷ்தீப் சிங்கை விளையாட வைக்க வேண்டும் என ரசிகர்கள் மத்தியில் கோரிக்கை வலுத்து வருகிறது. ஏனெனில் முழுக்க முழுக்க வேகப்பந்து வீச்சுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து பிரசித் கிருஷ்ணா ஒரே மாதிரியான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார்.