
தமிழ்நாட்டைச் சேர்ந்த 27 வயது இந்திரஜித், இதுவரை தமிழக அணிக்காக 55 முதல் தர ஆட்டங்களில் விளையாடி 11 சதங்களுடன் 3636 ரன்கள் எடுத்துள்ளார். இந்த வருட ரஞ்சி கோப்பைப் போட்டியில் 117, 127 என இரு சதங்கள் எடுத்து இரு ஆட்டங்களிலும் தமிழக அணி முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற உதவியுள்ளார்.
இந்நிலையில் 2016 முதல் முதல்தர கிரிக்கெட்டில் வேறு எந்த இந்திய வீரரை விடவும் அதிக சராசரி ரன்கள் எடுத்த வீரராக உள்ளார் இந்திரஜித். அதாவது குறைந்தது 25 ஆட்டங்களில் இடம்பெற்ற வீரர்களில் உலகளவில் 4ஆம் இடம் பிடித்துள்ளார்.
இப்பட்டியலில் ஆஃப்கானிஸ்தானின் பஹிர் ஷா, நியூசிலாந்தின் கான்வே, தென் ஆப்பிரிக்காவின் ஒபஸ் பியனார் ஆகிய மூன்று வீரர்கள் மட்டுமே இந்திரஜித்தை விடவும் அதிக சராசரிகளைக் கொண்டுள்ளார்கள். மேலும் சமீபத்தில் நடைபெற்ற 50 ஓவர் விஜய் ஹசாரே போட்டியில் 4 அரை சதங்கள் எடுத்து தமிழக அணி இறுதிச்சுற்று வரை முன்னேற உதவினார். இதனால் ஐபிஎல் ஏலத்தில் கொல்கத்தா அணி, இந்திரஜித்தை ரூ. 20 லட்சத்துக்குத் தேர்வு செய்துள்ளது.