
ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது நடைபெற்று வரும் 14ஆவது ஐபிஎல் தொடர் லீக் போட்டிகளின் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. இந்த தொடருக்கான பிளே ஆப் சுற்றுக்கு முதல் இரு அணிகளாக டெல்லி மற்றும் சென்னை அணிகள் தகுதி பெற்றன. அதனை தொடர்ந்து பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் தகுதி பெற்றுவிட்டது. தற்போது நான்காம் இடத்திற்கான போட்டியே குறிப்பிட்ட சில அணிகளுக்கு இடையே கடுமையான நிலவி வருகிறது.
இந்நிலையில் பிளே ஆப் சுற்றுக்கு முன்பாக தற்போது சென்னை அணியை சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளரான சாம் கரன் காயம் காரணமாக இந்த ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியுள்ளார். இதனால் அவருக்கு பதிலாக மாற்று வீரரை தெர்வு செய்யவேண்டிய கட்டாயத்திற்கு சென்னை அணி தள்ளப்பட்டது.
மேலும் இதுகுறித்து பிசிசிஐ-யிடம் அனுமதி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது மாற்று வீரரை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி ஏற்கனவே துபாயில் நெட் பவுலர்களாக இருக்கும் 4 வெஸ்ட் இண்டீஸ் வீரர்களில் ஒருவரை தேர்வு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இவ்வேளையில் எதிர்பார்த்தவாறே வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த ஆல்ரவுண்டர் டோமினிக் டிரேக்ஸ்-ஸை சிஎஸ்கே அணி ஒப்பந்தம் செய்துள்ளது.