
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள் மட்டுமே தேர்வாகியுள்ளார்கள். ஹார்திக் பாண்டியா நான்கு ஓவர்களையும் வீசுவார் என இதற்கு விளக்கம் அளித்தார் தேர்வுக்குழுத் தலைவர் சேதன் சர்மா. ஆனால், ஐபிஎல் 2021 போட்டியிலேயே பாண்டியா இதுவரை பந்துவீசாததால் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் அவரால் எப்படிப் பந்துவீச முடியும் என்கிற கேள்வி எழுந்துள்ளது.
2019 அக்டோபரில் அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட பாண்டியா, அதன்பிறகு விளையாடிய 41 சர்வதேச ஆட்டங்களில் 46 ஓவர்கள் மட்டுமே வீசியுள்ளார். கடைசியாக ஜூலை 25 அன்று இலங்கைக்கு எதிரான டி20 ஆட்டத்தில் இரு ஓவர்களை வீசினார். 2020 ஐபிஎல் போட்டி முதல் மும்பை அணியில் தொடர்ந்து விளையாடியபோதும் பாண்டியா பந்துவீசவில்லை.
இந்த வருடம் ஐக்கிய அரபு அமீரகத்தில் மும்பை விளையாடிய நான்கு ஆட்டங்களில் இரண்டில் பாண்டியா பங்கேற்கவில்லை. பிறகு விளையாடிய இரு ஆட்டங்களிலும் ஒரு பேட்டராக அவர் பங்கேற்றார்.