
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின்போது இறுதி கட்டத்தில் சிஎஸ்கே அணிக்காக விளையாடும் வாய்ப்பினை பெற்ற இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் அந்த தொடரில் தனது சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியதால் தற்போதைய 14ஆவது ஐபிஎல் தொடரின் ஆரம்பத்தில் இருந்து சிஎஸ்கே அணியின் தொடக்க வீரராக களம் இறங்கி விளையாடி வருகிறார்.
அணியில் சீனியர் வீரர்கள் ஆட்டம் இழந்தாலும் தனது பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கெய்க்வாட் இந்த தொடர் முழுவதுமே சிஎஸ்கே அணிக்காக பேட்டிங்கில் வலிமை சேர்த்து வருகிறார். அந்த வகையில் நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் அணிக்கு எதிரான லீக் போட்டியி ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக விளையாடி 60 பந்துகளில் 9 பவுண்டரி மற்றும் ஐந்து சிக்ஸர்களை விளாசி சதமடித்தார்.
இதுவரை சிஎஸ்கே அணிக்காக 17 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 611 ரன்களை குவித்துள்ளார். இதில் ஆறு அரை சதமும், ஒரு சதமும் அடங்கும். அதுமட்டுமின்றி நேற்றைய போட்டியில் அடித்த சதம் மூலம் அவர் இந்த சீசனில் அதிக ரன்களை குவித்த வீரராக ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.