
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த 20ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தொடக்க, நடுவரிசை பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்படததால், 10 ஓவர் முடிவில் அந்த அணி 4 விக்கெட் இழப்பிற்கு 67 ரன்களை சேர்த்திருந்தது. இதனைத் தொடர்ந்து ஷும்ரோன் ஹெட்மையர், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இருவரும் ஆட்டமிழக்காமல் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஒருபக்கம் ஷெட்மையர் அதிரடி காட்ட, மறுபக்கம் அஸ்வின் நிதானமாக விளையாடி வந்தார்.
இறுதியில் கடைசி இரண்டு ஓவர்கள் மட்டுமே மீதமிருந்த நிலையில், இதில் அதிரடி காட்டினால் மட்டுமே அணியால் ஸ்கோரை உயர்த்த முடியும் என்ற நிலை இருந்தது. அப்போது அஸ்வின் 28 ரன்கள் எடுத்திருந்தபோது ரிட்டயர்ட் அவுட் ஆகி வெளியேறினார். அஸ்வினின் ரன் சேர்ப்பு வேகம் குறைவாக இருந்ததால், அவரை மாற்றிவிட்டு இளம் வீரர் ரியான் பராக்கை களத்துக்கு ராஜஸ்தான் அணி அனுப்பியது. இதனால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 165/6 ரன்களை சேர்த்தது.