ஐபிஎல் 2022: மீண்டும் சதம் விளாசி அசத்திய பட்லர்; கேகேஆருக்கு 218 இலக்கு!
ஐபிஎல் 2022: கேகேஆருக்கு எதிரான போட்டியில் ஜோஸ் பட்லரின் மிரட்டலான சதத்தின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 218 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் 30ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீச தீர்மானித்தார்.
Trending
அதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக தேவ்தத் படிக்கல் - ஜோஸ் பட்லர் இணை களமிறங்கியது. இதில் படிக்கல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையிலிருந்த ஜோஸ் பட்லர் வழக்கம் போல் பவுண்டரி, சிக்சர்கள் என எதிரணி பந்துவீச்சை பிரித்துமேய்ந்தார்.
தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த பட்லர் 30 பந்துகளில் அரைசதமும் விளாசினார். அதன்பின் மறுமுனையிலிருந்த தேவ்தத் படிக்கல் 24 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அவரைத் தொடர்ந்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 19 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்சர்களை விளாசி 38 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
ஆனாலும் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த ஜோஸ் பட்லர் 59 பந்துகளில் சதம் விளாசி, இந்த சீசனில் தனது இரண்டாவது சதத்தைப் பதிவுசெய்தார். அதன்பின் 103 ரன்கள் எடுத்த நிலையில் ஜோஸ் பட்லர், பாட் கம்மின்ஸின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார்.
அதன்பின் களமிறங்கிய வீரர்களால் எதிரணி வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் ஆட்டமிழந்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்களைச் சேர்த்தது.
Win Big, Make Your Cricket Tales Now