Advertisement

ஐபிஎல் 2022: பழைய சம்பவத்தை நினைவு கூர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்த சஹால்!

குடிபோதையில் 15ஆவது மாடியில் வைத்து ஒரு ஐபிஎல் வீரர் செய்த செயலைச் சொல்லி அனைவரையும் அதிர வைத்துள்ளார் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சஹல்.

Bharathi Kannan
By Bharathi Kannan April 08, 2022 • 13:12 PM
IPL 2022: 'He was very drunk and dangled me off a 15th floor balcony' - Yuzvendra Chahal reveals sho
IPL 2022: 'He was very drunk and dangled me off a 15th floor balcony' - Yuzvendra Chahal reveals sho (Image Source: Google)
Advertisement

இந்தியா கண்ட சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவர் சஹல். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் முன்பு விளையாடி வந்த இவர் தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடி வருகிறார். இந்த சீசனில் இவர் இதுவரை சிறப்பாக பந்து வீசியுள்ளார்.

இந்த சீசனில் 3 போட்டிகளில் ஆடி 7 விக்கெட்களைச் சாய்த்துள்ளார் சஹல். சஹல் பந்து வீச்சில் சிறப்பாக செயல்படுவதோடு மட்டுமல்ல, எல்லோரிடமும் எளிமையாக பழகும் குணமும் உடையவர். 

Trending


இந்த நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு அளித்த ஒரு பேட்டியில் பழைய சம்பவம் ஒன்றைச் சொல்லி அனைவரையும் அதிர வைத்துள்ளார் சஹல். குடிபோதையில் ஒரு வீரர் செய்த செயலைத்தான் அவர் சொல்லியுள்ளார்.

இந்த வீடியோவை ராஜஸ்தான் ராயல்ஸ் தனது டிவிட்டரில் பகிர்ந்துள்ளது. அதில் சஹல் கூறியிருப்பதாவது: “நிறைய பேருக்கு இந்த சம்பவம் குறித்துத் தெரியாது. அது 2013ஆம் ஆண்டு. அப்போது நான் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆடிக் கொண்டிருந்தேன்.

பெங்களூரில் ஒரு போட்டி. அது முடிந்ததும் கெட் டு கெதர் வைத்திருந்தனர். அப்போது ஒரு வீரர் நன்றாக குடித்திருந்தார். அவரது பெயரைச் சொல்ல விரும்பவில்லை. செமையாக குடித்திருந்தார். தன்னிலையிலேயே அவர் இல்லை. என்னைப் பார்த்த அவர் அருகில் கூப்பிட்டார். பின்னர் அருகில் இருந்த பால்கனிக்கு அழைத்துச் சென்ற அவர் என்னை அப்படியே தூக்கி பால்கனியிலிருந்து தொங்க விட்டார். எனக்கு உயிரே போனது போல ஆகி விட்டது.

அது 15ஆவது மாடி. எனது கைகள் அவரது கைகளை இறுக்கமாக பிடித்திருந்தன. கொஞ்சம் நழுவினாலும் அவ்வளவுதான். அதேபோல அவர் நழுவ விட்டாலும் நான் காலி. அந்த சமயத்தில் வேறு சில வீரர்கள் இதைப் பார்த்து விட்டு ஓடி வந்து அந்த வீரரிடமிருந்து என்னை மீட்டனர். எனக்கு மயக்கமே வந்து விட்டது. என்னை அமர வைத்து குடிக்க தண்ணீர் கொடுத்தனர். நான் மயிரிழையில் உயிர் தப்பினேன் என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்த சம்பவத்திலிருந்து நான் தெரிந்து கொண்டது, நாம் எங்கிருந்தாலும், என்ன நிலையில் இருந்தாலும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளவேண்டும் என்பதே. அந்த சமயத்தில் நானோ அல்லது அந்த வீரரோ சிறு தவறு செய்திருந்தாலும் எனது உயிரே போயிருக்கும்” என்று தெரிவித்தார்.

சஹல் 2011ஆம் ஆண்டு மும்பை அணிக்கு ஒப்பந்தமான அவர், 2013ஆவது சீசனில் மட்டுமே மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடினார். அதன் பின்னர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு மாறினார். இப்போது ராஜஸ்தான் ராயல்ஸுக்கு வந்துள்ளார். சஹல் உயிருடன் விளையாடிய அந்த வீரர் யார் என்பது தெரியவில்லை. சஹலும் சொல்லவில்லை. ஆனால் அவர் யாராக இருக்கும் என்று ரசிகர்கள் ஆராய ஆரம்பித்து விட்டனர்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement