ஐபிஎல் 2022: ஹர்திக் பாண்டியாவின் மிரட்டல் கம்பேக்!
ஐபிஎல் 15வது சீசனில் ஹர்திக் பாண்டியாவின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்த நிலையில், முதல் போட்டியிலேயே 140 கிமீ வேகத்தில் பந்துவீசி மிரட்டினார்.
அதிரடியான பேட்டிங், அபாரமான பவுலிங், அருமையான ஃபீல்டிங் என சிறந்த ஆல்ரவுண்டராக வலம்வந்த ஹர்திக் பாண்டியா, முதுகில் செய்த அறுவை சிகிச்சைக்கு பிறகு பந்துவீசமுடியாமல் திணறிவந்தார். அதனால் அவருக்கு இந்திய அணியிலும் இடம் கிடைக்காமல் இருந்துவருகிறது.
கடந்த ஐபிஎல்லிலும் மும்பை இந்தியன்ஸுக்காக ஆடியபோது அவர் பந்துவீசவில்லை. கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையிலும் அவர் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதற்கிடையே, அவருக்கு மாற்று ஆல்ரவுண்டராக வெங்கடேஷ் ஐயர் சிறப்பாக ஆடி இந்திய அணியில் இடம் பிடித்தார்.
Trending
இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை நடக்கவுள்ள நிலையில், டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற வேண்டுமென்றால், ஹர்திக் பாண்டியா மீண்டும் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங்கில் சிறப்பாக விளையாடி தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
அந்தவகையில், அதை செய்வதற்கு அவருக்கான சிறந்த வாய்ப்பாக ஐபிஎல் தான் பார்க்கப்படுகிறது. இந்த சீசனில் ஹர்திக் பாண்டியா மீதுதான் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. அவர் பவுலிங் வீசுமளவிற்கு ஃபிட்னெஸை பெற்றுவிட்டாரா, எந்தளவிற்கு பந்துவீசுகிறார் என்பதெல்லாம் பெரும் எதிர்பார்ப்பாக இருந்த நிலையில், மும்பை அணி கழட்டிவிட்ட ஹர்திக் பாண்டியாவை குஜராத் டைட்டன்ஸ் அணி வாங்கி அவரையே கேப்டனாக நியமித்ததால், கேப்டன்சி அழுத்தமும் அவருக்கு அதிகரித்தது.
ஆனால் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பேட்டிங், பவுலிங்குடன் கேப்டன்சியும் சிறப்பாக செய்தார். ஷமி முதல் பந்தில் ராகுலை வீழ்த்தியதிலிருந்தே லக்னோ அணி மீது முழுவதுமாக அழுத்தம் போட்டு ஆதிக்கம் செலுத்த வைத்தார் குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா. கேப்டனாக களத்திற்கு வந்த முதல் பந்தே வெற்றிகரமான டி.ஆர்.எஸ் எடுத்தார்.
பாண்டியா பந்துவீசுவாரா என்பதுதான் பெரும் எதிர்பார்ப்பாக இருந்த நிலையில், அவரது 4 ஓவர்கள் முழு கோட்டாவையும் வீசினார் பாண்டியா. 140 கிமீ வேகத்தில் பந்துவீசி மிரட்டினார் பாண்டியா. எனவே அவர் பந்துவீசுமளவிற்கு முழு ஃபிட்னெஸை பெற்றுவிட்டார். பேட்டிங்கிலும் 33 ரன்கள் அடித்தார்.
பாண்டியா மீது இந்திய அணி நிர்வாகம், ரசிகர்கள் என அனைத்து தரப்பினரும் ஒரு கண் வைத்திருந்த நிலையில், பேட்டிங், பவுலிங், கேப்டன்சி என அனைத்திலும் பட்டைய கிளப்பி தனது கம்பேக்கை கன்ஃபாம் செய்துள்ளார் ஹர்திக் பாண்டியா.
Win Big, Make Your Cricket Tales Now