ஐபிஎல் 2022: சிஎஸ்கேவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது கேகேஆர்!
ஐபிஎல் 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான முதல் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

ஐபிஎல் 15ஆவது சீசன் இன்று தொடங்கியுள்ளது. மும்பை வான்கடேவில் நடைபெற்ற முதல் போட்டியில், ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சிஎஸ்கே அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கேகேஆர் அணியும் விளையாடியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீச தீர்மானித்தார்.
Trending
சிஎஸ்கே அணியில் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் நியூசிலாந்தின் டெவான் கான்வே ஆகிய இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். கேகேஆர் அணி சார்பில் முதல் பந்தையே நோ பாலாக வீசிய உமேஷ் யாதவ், ஃப்ரீ ஹிட்டில் ரன்னே கொடுக்காமல் அருமையாக வீசினார். 3ஆவது பந்திலேயே ருதுராஜை ரன்னே அடிக்கவிடாமல் டக் அவுட்டாக்கி அனுப்பினார் உமேஷ் யாதவ்.
இதையடுத்து டெவான் கான்வேவுடன் 2ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ராபின் உத்தப்பா அடித்து ஆடிக்கொண்டிருக்க, 8 பந்தில் 3 ரன்களுக்கு வெளியேறினார் டெவான் கான்வே. கான்வேவையும் உமேஷ் யாதவே வீழ்த்தினார்.
அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த ராபின் உத்தப்பா 28 ரன்னில் வருண் சக்கரவர்த்தியின் சுழலில் ஸ்டம்பிங் ஆகி வெளியேறினார். அம்பாதி ராயுடு 15 ரன்னில் ரன் அவுட்டானார். ஷிவம் துபே 3 ரன்னில் ஆட்டமிழக்க, 10.5 ஓவரில் 61 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது சிஎஸ்கே.
அதன்பின்னர் ஜடேஜாவுடன் தோனி ஜோடி சேர்ந்தார். இருவரும் இணைந்து விக்கெட்டை விடாமல் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடினர். டெத் ஓவர் வரை விக்கெட்டை இழக்காமல் ஆடிய நிலையில், கடைசி 2 ஓவர்களில் தோனி பவுண்டரிகளை விளாசினார்.
இப்போட்டியில் விண்டேஜ் தோனியாக மாறி கடைசி 2 ஓவரில் அடி வெளுத்து வாங்கினார். 19ஆவது ஓவரில் ஒரு பவுண்டரியும் சிக்ஸரும் விளாசிய தோனி, கடைசி ஓவரில் 2 பவுண்டரி அடித்து 38 பந்தில் அரைசதம் அடித்தார். கடைசி பந்தில் சிக்ஸர் விளாசி இன்னிங்ஸை முடித்தார்.
இதையடுத்து 20 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி 131 ரன்களைச் சேர்த்தது. கேகேஆர் அணி தரப்பில் உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து 132 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய கேகேஆர் அணிக்கு வெங்கடேஷ் ஐயர் - அஜிங்கியா ரஹானே இணை அபாரமான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் வெங்கடேஷ் ஐயர் 16 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த நிதீஷ் ராணா 21 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
இருப்பினும் மறுமுனையில் அதிரடியாக விளையாடிய அஜிங்கியா ரஹானே 34 பந்துகளில் 6 பவுண்டரி, ஒரு சிக்சரை விளாசி 46 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் - சாம் பில்லிங்ஸ் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இதில் சாம் பில்லிங்ஸ் 25 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, மறுமுனையிலிருந்த ஸ்ரேயாஸ் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார்.
இதன்மூலன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 18.3 ஓவர்களில் கேகேஆர் அணி இலக்கை எட்டி, 6 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தியது. சிஎஸ்கே தரப்பில் டுவைன் பிராவோ 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
Win Big, Make Your Cricket Tales Now