ஐபிஎல் 15ஆவது சீசனில் மும்பை வான்கடேவில் இன்று நடந்துவரும் போட்டியில் சிஎஸ்கேவும் பஞ்சாப் கிங்ஸும் ஆடிவருகின்றன. இரு அணிகளுமே வெற்றி முனைப்பில் ஆடிவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் ரவீந்திர ஜடேஜா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
அதனப்டி முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர் மயன்க் அகர்வால் 21 பந்தில் 18 ரன்கள் மட்டுமே அடிக்க, பவர்ப்ளேயில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 37 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது பஞ்சாப் அணி. அதன்பின்னர் 2வது விக்கெட்டுக்கு தவானும் பானுகா ராஜபக்சாவும் இணைந்து அடித்து ஆடினர். இருவரும் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 110 ரன்களை சேர்த்தனர். 7-15 ஓவர்களில் இருவரும் இணைந்து 83 ரன்களை குவித்தனர்.
அதிரடியாக ஆடிய தவான் அரைசதம் அடிக்க, டெத் ஓவரில் களத்திற்கு வந்த லிவிங்ஸ்டோன், 19வது ஓவரில் ஒரு பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்களை விளாசினார். தவானும் அந்த ஓவரில் ஒரு பவுண்டரி அடித்தார். தவான் 59 பந்துகளில் 88 ரன்களை குவிக்க, 20 ஓவரில் 187 ரன்களை குவித்த பஞ்சாப் கிங்ஸ் அணி, 188 ரன்களை சிஎஸ்கேவிற்கு இலக்காக நிர்ணயித்தது.