ஐபிஎல் 2022: குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்!
ஐபிஎல் 2022: குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
ஐபிஎல் 15ஆவது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இன்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் ஆடிவருகின்றன. மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க வீரர் ஷுப்மன் கில் 9 ரன்னில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான சஹா 21 ரன்னில் நடையை கட்டினார். ஹர்திக் பாண்டியா(1), டேவிட் மில்லர்(11), ராகுல் டெவாட்டியா(11), ரஷீத் கான்(0) ஆகியோர் ஒருமுனையில் சொற்ப ரன்களுக்கு சீரான இடைவெளியில் நடையை கட்ட, மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய சாய் சுதர்ஷன் அரைசதம் அடித்தார்.
Trending
ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் நிலைத்து நின்று பொறுப்புடன் ஆடி குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக சிறப்பாக ஆடி அரைசதம் அடித்து கடைசி வரை களத்தில் நின்று குஜராத் அணி 143 ரன்கள் அடிக்க உதவினார். சாய் சுதர்ஷன் 50 பந்தில் 64 ரன்கள் அடித்தார்.
20 ஓவரில் 143 ரன்கள் அடித்துள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி, 144 ரன்கள் என்ற எளிய இலக்கை பஞ்சாப் கிங்ஸுக்கு நிர்ணயித்தது.
இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் தொடக்க வீரர் ஜானி பேர்ஸ்டோவ் ஒரு ரன்னுடன் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த ஷிகர் தவான் - பனுகா ராஜபக்ஷ இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிகர் தவான் அரைசதம் கடந்தார். மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ராஜபக்ஷ 40 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார்.
அதைத்தொடர்ந்து களமிறங்கிய லியாம் லிவிங்ஸ்டோன், முகமது ஷமி வீசிய 16ஆவது ஓவரில் ஹாட்ரிக் சிக்சர்களை விளாசி அணியின் வெற்றியை தேடித்தந்தார்.
இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 16 ஓவர்களில் இலக்கை எட்டி, 8 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது.
இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷிகர் தவான் 65 ரன்களையும், லியாம் லிவிங்ஸ்டோன் 32 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
Win Big, Make Your Cricket Tales Now