ஐபிஎல் 2022: ரியான் பராக்கை பாராட்டிய சஞ்சு சாம்சன்!
பெங்களூர் அணியுடனான இந்த வெற்றி குறித்து பேசிய ராஜஸ்தான் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சன், வெற்றிக்கு காரணமான ரியான் பராக்கை வெகுவாக பாராட்டி பேசியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் 39வது லீக் போட்டியில் டூபிளசிஸ் தலைமையிலான பெங்களூர் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.
புனே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் டுபிளசி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
Trending
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக ரியான் பிராக் 56* ரன்கள் எடுத்து கொடுத்தார்.
இதன்பின் 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய பெங்களூர் அணிக்கு அந்த அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி (9), டூபிளசிஸ் (23), மேக்ஸ்வெல் (0), தினேஷ் கார்த்திக் (6) மற்றும் ஹசரங்கா (18) ஆகியோர் பெரும் ஏமாற்றம் கொடுத்து அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறியதால் 19.3 ஓவரில் 115 ரன்கள் மட்டுமே எடுத்த பெங்களூர் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அதிகபட்சமாக குல்தீப் சென் மற்றும் ரவிச்சந்திர அஸ்வின் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இந்தநிலையில், பெங்களூர் அணியுடனான இந்த வெற்றி குறித்து பேசிய ராஜஸ்தான் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சன், வெற்றிக்கு காரணமான ரியான் பராக்கை வெகுவாக பாராட்டி பேசியுள்ளார்.
வெற்றி குறித்து சஞ்சு சாம்சன் பேசுகையில், “இந்த போட்டியில் நாங்கள் இரண்டு மாற்றங்களுடன் களமிறங்கினோம், எதிரணிகளை வைத்து தான் அணியில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து ஆலோசிப்போம், மற்றபடி வீரர்கள் அனைவருக்கும் போதிய வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் என்பது தான் எங்களது நோக்கம். இந்த போட்டியில் எங்களுக்கு டாரில் மிட்செல் தேவை என்பதால் தான் கருண் நாயர் அணியில் இருந்து நீக்கப்பட்டார், இதனை கருண் நாயர் சரியாக புரிந்து கொண்டார், அவருக்கு எனது வாழ்த்துக்கள். இந்த போட்டியில் கிடைத்துள்ள வெற்றி மகிழ்ச்சியளிக்கிறது. ரியான் பிராக் கடைசி 5 ஓவர்களில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார், நாங்கள் அவர் மீது நம்பிக்கை வைத்தே அவருக்கு தொடர்ந்து வாய்ப்பளித்தோம், அவர் இந்த போட்டியில் தன்னால் என்ன முடியும் என்பதை நிரூபித்துவிட்டார். அடுத்தடுத்த போட்டிகளிலும் சிறப்பாக செயல்படுவோம்” என்று தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now