ஐபிஎல் 2022: கேகேஆரை வீழ்த்தி ஆர்சிபி த்ரில் வெற்றி!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் ஆர்சிபி அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது.
ஐபிஎல் 15ஆவது சீசனின் இன்றைய போட்டியில் ஆர்சிபி மற்றும் கேகேஆர் அணிகள் ஆடிவருகின்றன. மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் ஃபாஃப் டுப்ளெசிஸ் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
ஆர்சிபி அணி கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் இந்த போட்டியிலும் ஆடியது. அந்த அணியின் ஆடும் லெவனில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கேகேஆர் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டது. ஃபாஸ்ட் பவுலர் ஷிவம் மாவிக்கு பதிலாக டிம் சௌதி சேர்க்கப்பட்டார்.
Trending
முதலில் பேட்டிங் ஆடிய கேகேஆர் அணியின் தொடக்க வீரர்கள் வெங்கடேஷ் ஐயரை(10) ஆகாஷ் தீப்பும், அஜிங்க்யா ரஹானேவை (9) முகமது சிராஜும் வீழ்த்தினர். அதன்பின்னர் கேகேஆர் அணியின் மிடில் ஆர்டரை ஆர்சிபி ஸ்பின்னர் வனிந்து ஹசரங்கா சரித்தார்.
கேகேஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் (13) மற்றும் சுனில் நரைன் (12) ஆகிய இருவரையும் ஹசரங்கா வீழ்த்த, நிதிஷ் ராணாவை (10) ஆகாஷ் தீப் மற்றும் சாம் பில்லிங்ஸை (14) ஹர்ஷல் படேல் ஆகிய இருவரும் வீழ்த்தினர்.
ஷெல்டான் ஜாக்சனை முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டாக்கி அனுப்பிய ஹசரங்கா, டிம் சௌதியை ஒரு ரன்னில் வெளியேற்றினார். வழக்கம்போலவே தனது இயல்பான அதிரடி பேட்டிங்கை ஆடி ஒரு பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் விளாசிய ஆண்ட்ரே ரசல் 18 பந்தில் 25 ரன்கள் அடித்த நிலையில் ஹர்ஷல் படேலின் சாமர்த்தியமான பவுலிங்கில் வீழ்ந்தார்.
டெயிலெண்டர் உமேஷ் யாதவ் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 12 பந்தில் 18 ரன்கள் அடித்தார். தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்த கேகேஆர் அணி, 18.5 ஓவரில் 128 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தரப்பில் வநிந்து ஹசரங்கா 4 விக்கெட்டுகளையும், ஆகாஷ் தீப் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து எளிய இலக்கை துரத்திய ஆர்சிபி அணிக்கும் ஆரம்பமே அதிர்ச்சியளிக்கும் விதமாக அனுஜ் ராவத் ரன் ஏதுமின்றியும், ஃபாஃப் டூ பிளெசிஸ் 5 ரன்களிலும், விராட் கோலி 12 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த டேவிட் வில்லி - செர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர். ஒருகட்டத்தில் பொறுப்பாக விளையாடிவந்த டேவிட் வில்லி 18 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய ஷபாஸ் அஹ்மத் அதிரடியாக விளையாடி 3 சிக்சர்களை விளாசினார். இதனால் ஆர்சிபி அணியின் வெற்றியும் நெருங்கியது. ஆனால் 27 ரன்கள் எடுத்திருந்த அஹ்மத் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து ரூதர்ஃபோர்டும் 28 ரன்களில் நடையைக் கட்டினார்.
பின்னர் களமிறங்கிய ஹசரங்கா ஒரு பவுண்டரி அடுத்த நிலையில் அடுத்த பந்தே விக்கெட்டை இழந்தார். இதனால் இப்போட்டியில் யார் வெற்றிபெறுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது.
இறுதியில் ஹர்ஷல் படேல் ஒருசில பவுண்டர்களை அடித்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார். கேகேஆர் அணி தரப்பில் டிம் சௌதி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதன்மூலம் ஆர்சிபி அணி 19.2 ஓவர்களில் இலக்கை எட்டி 3 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது.
Win Big, Make Your Cricket Tales Now