
புனேயில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆர்சிபி அணி. முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்தது. 174 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் சேர்த்து 13 ரன்களில் தோல்வி அடைந்தது.
இந்த வெற்றியின் மூலம் ஆர்சிபி அணி 12 புள்ளிகளுடன் 4ஆவது இடத்துக்கு முன்னேறியது. சிஎஸ்கே அணி 10 போட்டிகளில் 6 புள்ளிகளுடன் 9ஆவது இடத்தில் இருக்கிறது. சிஎஸ்கேயின் நிலைமையைப் பார்த்தால் இந்த ஆண்டு சீசனில், ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்வது கூட கடினம்தான். முன்னாள் சாம்பியன்கள் சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் அணியினர் இந்த ஆண்டு லீக் சுற்றோடு வெளியேற வேண்டியதிருக்கும்.
ஆர்சிபி அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தவர் ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல். பேட்டிங்கில் சொதப்பினாலும் பந்துவீச்சில் இரு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு துணையாகினார். குறிப்பாக அம்பதி ராயுடு, உத்தப்பா ஆகிய இரு பெரிய விக்கெட்டுகள மேக்ஸ்வெல் சாய்த்தார். தவிர ஹர்சல் படேல் அருமையாகப் பந்துவீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றி வெற்றியை உறுதி செய்தார். ஜடேஜா, மொயின்அலி, பிரிட்டோரியஸ் ஆகிய பேட்ஸ்மேன்களை படேல் வெளியேற்றி வெரறறியை உறுதி செய்தார்.