ஐபிஎல் 2022: மும்பையின் வெற்றிக்காக பிராத்திக்கும் ஆர்சிபி!
டூபிளசிஸ் தலைமையிலான பெங்களூர் அணி நடப்பு ஐபிஎல் தொடர் ப்ளே ஆஃப் சுற்றிற்கு தகுதி பெறுவதற்கு எஞ்சியுள்ள வாய்ப்புகள் குறித்து இங்கு பார்ப்போம்.
15ஆவது ஐபிஎல் தொடரின் 67வது லீக் போட்டியில் டூபிளசிஸ் தலைமையிலான பெங்களூர் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணியும் மோதின.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 62* ரன்களும், டேவிட் மில்லர் 34 ரன்களும் எடுத்தனர்.
Trending
இதன்பின் 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்டக்கூடிய இலக்கை துரத்தி களமிறங்கிய பெங்களூர் அணிக்கு டூபிளசிஸ் மற்றும் விராட் கோலி ஆகியோர் மிக சிறப்பான துவக்கம் கொடுத்தனர். கடந்த போட்டியில் மிக கடுமையாக சொதப்பிய விராட் கோலி, இந்த போட்டியில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
பெங்களூர் அணியின் கேப்டனான டூபிளசிஸ் 38 பந்துகளில் 44 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 54 பந்துகளில் 73 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்தார். மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய கிளன் மேக்ஸ்வெல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 18 பந்துகளில் 40* ரன்கள் எடுத்து கொடுத்ததன் மூலம் 18.4 ஓவரில் இலக்கை எட்டிய பெங்களூர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
குஜராத் அணிக்கு எதிரான இந்த வெற்றியின் மூலம் பெங்களூர் அணி தனது ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்து கொண்டது. அதே வேளையில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்து வெளியேறியது.
பெங்களூர் அணி இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் மீண்டும் நான்காவது இடத்திற்கு முன்னேறி தனது ப்ளே ஆஃப் சுற்றிற்கு தகுதி பெறும் வாய்ப்பை தக்க வைத்து கொண்டாலும், 22ம் தேதி நடைபெற இருக்கும் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் இடையேயான போட்டியின் முடிவே முக்கியமானதாகும்.
இன்று மாலை (20-5-22) நடைபெறும் சென்னை – ராஜஸ்தான் இடையேயான போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றால் ராஜஸ்தான் அணி 18 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு முன்னேறிவிடும். ராஜஸ்தான் அணி 2வது இடத்திற்கு முன்னேறினால், லக்னோ அணி மூன்றாவது இடத்திற்கு பின்தள்ளப்படும். ஒருவேளை சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி தோல்வியடையும் பட்சத்தில் ராஜஸ்தான் அணியும் மும்பை – டெல்லி இடையேயான போட்டியின் முடிவிற்காக காத்திருக்கும் நிலை ஏற்படும்.
சனிக்கிழமை நடைபெறும் டெல்லி – மும்பை இடையேயான போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்றால் அது பெங்களூர் அணிக்கு பெரிய பிரச்சனையை ஏற்படுத்தும். டெல்லி அணி தோல்வியடைந்தால் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும்.
ஒருவேளை மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்று, மறுபுறம் சென்னை அணியிடம் ராஜஸ்தான் அணி தோல்வியடைந்தாலும், பெங்களூர் அணிக்கான வாய்ப்பு மிக குறைவாகவே பார்க்கப்படுகிறது. பெங்களூர் அணியைவிட ராஜஸ்தான் அணி ரன் ரேட்டில் நல்ல நிலையில் உள்ளதால், பெங்களூர் அணியைவிட ராஜஸ்தான் அணிக்கே வாய்ப்பு மிக அதிகம். ராஜஸ்தான் அணி சென்னை அணியிடம் மிக மோசமான தோல்வியை சந்தித்தால் மட்டுமே அது பெங்களூர் அணிக்கு சிறிது சாதகமாக அமையும்.
ஒருவேளை எஞ்சியுள்ள இரண்டு போட்டியில் டெல்லி மற்றும் ராஜஸ்தான் ஆகிய இரண்டு அணிகளுமே வெற்றி பெற்றால், இரண்டு அணிகளையும் விட ரன் ரேட்டில் குறைவாக இருக்கும் பெங்களூர் அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை இழக்க நேரிடும்.
Win Big, Make Your Cricket Tales Now