Advertisement

ஐபிஎல் 2022: நான் செய்தது தவறுதான் - ரிஷப் பந்த்!

அம்பயர்களுடன் விவாதிக்க டெல்லி அணியின் பயிற்சியாளரான பிரவீன் ஆம்ரேவை களத்திற்குள் அனுப்பியது தவறு தான் என டெல்லி அணியின் கேப்டனான ரிஷப் பந்த் ஒப்புக்கொண்டுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan April 23, 2022 • 11:53 AM
IPL 2022: Rishabh Pant Made A Big Statement After The No-Ball Controversy
IPL 2022: Rishabh Pant Made A Big Statement After The No-Ball Controversy (Image Source: Google)
Advertisement

ஐபிஎல் தொடரின் 34ஆவது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் வெறும் 2 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் குவித்தது. 

Trending


ஐந்தாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய லலித் யாதவின் பொறுப்பான ஆட்டத்தின் மூலம், டெல்லி அணி தனது வெற்றிக்கு கடைசி இரண்டு ஓவரில் 36 ரன்கள் தேவை என்ற நிலை வரை வந்தது. போட்டியின் 19ஆவது ஓவரை வீசிய பிரசீத் கிருஷ்ணா அந்த ஓவரில் ஒரு ரன் கூட கொடுக்காமல், லலித் யாதவின் (37) விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தியதன் மூலம், டெல்லி அணியின் வெற்றிக்கு கடைசி ஒரு ஓவரில் 36 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.

ஓபேத் மெக்காய் வீசிய கடைசி ஓவரை எதிர்கொண்ட ரோவ்மன் பவல், அந்த ஓவரின் முதல் மூன்று பந்திலும் சிஸ்கர் அடித்து, ராஜஸ்தான் அணிக்கு பெரிய பயத்தை காட்டினாலும், அடுத்த மூன்று பந்துகளில் சிக்ஸர் அடிக்க தவறியதால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்த டெல்லி அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்த போட்டியின் கடைசி ஓவரின் மூன்றாவது பந்தை, ஓபட் மெக்காய் புல் டாஸாக வீசினார், இது பேட்ஸ்மேனின் இடுப்புக்கு மேலே சென்றது தெளிவாக தெரிந்த போதிலும், அம்பயர் அதற்கு நோ – பால் கொடுக்கவில்லை, இதனால் கடுப்பான டெல்லி வீரர்கள் ஆடுகளத்திற்கு வெளியே இருந்து நோ – பால் கொடுக்க வேண்டும் என கூச்சலிட்டனர். 

இதில் கேப்டனான ரிஷப் பண்ட் ஒரு படி மேலே சென்று ஆடுகளத்தில் இருந்த தனது வீரர்களை வெளியே வருமாறு அழைப்பு கொடுத்தார், போதாக்குறைக்கு டெல்லி அணியின் பயிற்சியாளர்களில் ஒருவரான பிரவீன் ஆம்ரேவை களத்திற்குள் அனுப்பி அம்பயர்களிடம் விவாதிக்க வைத்தார்.

ரிஷப் பண்ட்டின் இந்த செயல் அவர் மீது கடும் விமர்ச்சனங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தான் அப்படி செய்தது தவறு தான் என ரிஷப் பந்த் ஒப்புக்கொண்டுள்ளார்.

இது குறித்து ரிஷப் பந்த் பேசுகையில், “ராஜஸ்தான் அணி மிக சிறப்பாக பந்துவீசியது, ஆனால் கடைசி நேரத்தில் ரோவ்மன் பவுலின் அதிரடி ஆட்டம் எங்களுக்கு சிறிய நம்பிக்கையை கொடுத்தது. கடைசி ஓவரின் மூன்றாவது பந்து நோ – பால் தான் என்பது மைதானத்தில் இருந்த அனைவருக்கும் தெரியும், ஆனால் அம்பயர் அதற்கு நோ – பால் கொடுக்காதது மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்தது. 

நோ-பால் கொடுக்கப்பட்டிருந்தால் அது இந்த போட்டியில் பெரும் திருப்புமுனையாக அமைந்திருக்கும். மூன்றாவது நடுவர் தலையிட்டு நோ – பால் கொடுக்க வேண்டும் என நினைத்தோம், நான் எனக்கு ஏற்பட்ட விதிமுறைகளை மாற்ற முடியாது. பயிற்சியாளர் பிரவின் ஆம்ரேவை களத்திற்குள் அனுப்பியது நிச்சயம் சரியான முறை இல்லை தான், ஆனால் எங்களுக்கு நடந்ததும் பெரிய தவறும் தான்” என்று தெரிவித்தார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement