
இன்று நடைபெற்று ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. பஞ்சாப் கிங்ஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர் ஷிகர் தவானுக்கு இந்த போட்டி அவரது 200ஆவது ஐபிஎல் போட்டியாகும். போட்டி துவங்கிய சில நிமிடங்களிலேயே சாதனை ஒன்றை நிகழ்த்தினார். ஐபிஎல் தொடரில் 6 ஆயிரம் ரன்களை கடந்து அசத்தினார். விராட் கோலிக்கு பிறகு இந்த சாதனையை படைத்த இரண்டாவது வீரர் தவான் ஆவார்.
இதே போட்டியில், தவான் மற்றொரு சாதனையையும் படைத்தார். ஒட்டுமொத்தமாக டி20 கிரிக்கெட்டில் 9 ஆயிரம் ரன்களை கடந்தார். விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவுக்குப் பிறகு இந்த சாதனையை எட்டிய மூன்றாவது இந்தியர் ஆனார் தவான். இந்த போட்டியில் 59 பந்துகளை சந்தித்த தவான் 9 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உட்பட 88 ரன்கள் குவித்து அசத்தினார்.
இதன் மூலம் தனது 200ஆவது ஐபிஎல் போட்டியில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார் தவான். முன்னதாக மும்பை வீரர் ரோஹித் சர்மா தனது 200ஆவது ஐபிஎல் போட்டியில் 68 ரன்கள் குவித்ததே அதிகபட்சமாக இருந்தது.