
இரண்டு வருடங்களுக்கு முன்பே ஐபிஎல் அணியில் இடம்பெற்றவர் தமிழக இடக்கை சுழற்பந்து வீச்சாளர் சாய் கிஷோர். 2020 ஐபிஎல் ஏலத்தில் சாய் கிஷோரை ரூ. 20 லட்சத்துக்குத் தேர்வு செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. அந்த வருடம் சிஎஸ்கே மோசமாக விளையாடி புள்ளிகள் பட்டியலில் 7ஆம் இடம் பிடித்தும் சாய் கிஷோருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
அடுத்த இரு வருடங்களில் உள்ளூர் கிரிக்கெட் ஆட்டங்களில் இன்னும் அதிகமாகத் திறமையை நிரூபித்தார் சாய் கிஷோர். இதனால் இந்திய அணிக்கும் தேர்வானார். அங்கும் விளையாடுவதற்கான சந்தர்ப்பம் அமையவில்லை. சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் ரூ. 3 கோடிக்கு சாய் கிஷோரைத் தேர்வு செய்தது பாண்டியா தலைமையிலான குஜராத் அணி.
ஐபிஎல் 2022 ஏலத்தில் ஒரு வீரரைத் தேர்வு செய்ய அதிக அணிகள் போட்டியிட்டதில் சாய் கிஷோரும் உள்ளார். தீபக் ஹூடா, சாய் கிஷோர், டிம் டேவிட் என மூன்று வீரர்களையும் தேர்வு செய்ய அதிகபட்சமாகத் தலா 6 அணிகள் போட்டியிட்டன. சாய் கிஷோர் ரூ. 3 கோடிக்கும் டிம் டேவிட் ரூ. 8.25 கோடிக்கும் தீபக் ஹூடா ரூ. 5.75 கோடிக்கும் தேர்வானார்கள். இவர்களில் சாய் கிஷோரையும் தீபக் ஹூடாவையும் தேர்வு செய்ய சிஎஸ்கே முயன்று பிறகு தொகை அதிகமானதால் போட்டியிலிருந்து விலகியது.