
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 59ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆனால் மும்பை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் வந்த வேகத்தில் நடையை கட்டினர்.
தொடக்கத்தில் டேவான் கான்வே ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த மொயீன் அலி ரன் எதுவும் எடுக்காமலும், ராபின் உத்தப்பா 1 ரன்களில், ருதுராஜ் கெய்க்வாட் 7 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். சென்னை அணியில் கேப்டன் எம்எஸ் தோனி மட்டும் நிலைத்து நின்று ஆடினார். ஒரு சில பந்துகளை மட்டும் பவுண்டரி, சிக்சருக்கு அனுப்பி டோனி தொடர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் மற்ற பேட்டர்கள் ஒத்துழைப்பு தரவில்லை. ஷிவம் துபே (10), டுவைன் பிராவோ (12), சிமர்ஜித் சிங் (2), மகேஷ் தீக்ஷனா (0) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
கடைசி விக்கெட்டுக்கு முகேஷ் சவுத்ரியை கொண்டு 20 ஓவர்கள் ஆட தோனி முயற்சித்தார். இதனால் ஓவரின் கடைசி பந்தில் 1 ரன் எடுத்து அடுத்த ஓவரில் ஸ்டிரைக்குக்கு வர வேண்டிய நிர்பந்தம் தோனிக்கு இருந்தது. இந்த நிலையில், ரைலி மெரெடித் வீசிய 16ஆவது ஓவரின் கடைசி பந்தில் ரன் எடுக்க முயற்சித்தார் தோனி. ஆனால், முகேஷ் சவுத்ரி ரன் அவுட் ஆனார். இதனால், 16 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 97 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தோனி 33 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார். இதில் 4 பவுண்டரிகளும் 2 சிக்சர்களும் அடங்கும். மற்ற பேட்டர்கள் யாரும் 13 ரன்களைக்கூட தொடவில்லை. மும்பை அணியில் டேனியல் சாம்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.