ஐபிஎல் 2022: சுரேஷ் ரெய்னா எனக்கு கடவுளை போன்றவர் - கார்த்திக் தியாகி!
ரஞ்சி கோப்பையில் சுரேஷ் ரெய்னா தன்னை அடையாளம் கண்டதாக தியாகி கூறியுள்ளார்.
ஐபிஎல் 2022 தொடர் வெற்றிகரமான 3ஆவது வார்த்தை கடந்து பல விறுவிறுப்பான எதிர்பாராத திரில்லர் திருப்பங்களுடன் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. பொதுவாக நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து அவர்களை தூசி தட்டி தங்களது அபார திறமையால் ஜொலிக்க வைத்து உலகிற்கு அடையாளம் காட்டும் நோக்கிலேயே இந்த ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்டது. அந்த வகையில் இந்த வருட ஐபிஎல் தொடரில் ஆயுஷ் பதோனி போன்ற ஒருசில தரமான வீரர்கள் தங்களது முழு திறமையை வெளிப்படுத்தி முதல்முறையாக ரசிகர்கள் மற்றும் வல்லுநர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர்.
அதேபோல் ஒரு சில வீரர்கள் வாய்ப்பு கிடைக்காமல் பெஞ்சில் சரியான நேரத்திற்காக காத்துக் கொண்டும் இருக்கிறார்கள். அந்த வகையில் இந்தியாவின் இளம் வேகப்பந்து வீச்சாளர் கார்த்திக் தியாகி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.
Trending
கடந்த 2020ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க மண்ணில் நடந்த ஐசிசி அண்டர்-19 உலக கோப்பை தொடரில் அற்புதமாக பந்துவீசிய அவர் 11 விக்கெட்டுகளை எடுத்து கவனம் ஈர்த்தார். அதன் காரணமாக ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட அவர் கடந்த சில வருடங்களாக அந்த அணிக்காக 14 போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
தொடர்ச்சியாக 140 – 145 கி.மீ வேகப்பந்துகளை வீசும் வல்லமை பெற்ற இவர் கடந்த 2021இல் பஞ்சாப்புக்கு எதிரான ஒரு போட்டியில் கடைசி ஓவரில் வெற்றிக்கு 4 ரன்கள் தேவைப்பட்ட போது வெறும் 1 ரன் மட்டுமே கொடுத்து தனி ஒருவனாக வெற்றியைத் தேடி கொடுத்து தனது திறமையை வெளிப்படுத்தினார்.
அதன்பின் காயமடைந்த அவரை இந்த வருடம் ஹைதராபாத் அணி நிர்வாகம் 4 கோடி என்ற மிகப்பெரிய தொகைக்கு வாங்கியுள்ளது. ஏற்கனவே நல்ல திறமையை பெற்றுள்ள அவர் தற்போது ஐதராபாத் அணியில் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக இருக்கும் தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் மேற்பார்வையில் மேலும் பட்டை தீட்டப்பட்டு வருகிறார்.
இந்நிலையில் தனது ஆரம்ப நாட்களில் நிலவிய கடினமான சூழ்நிலைகளின்போது இந்தியாவைச் சேர்ந்த நட்சத்திர முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கடவுள் மாதிரி வந்து உதவி செய்தார் என்று கார்த்திக் தியாகி மனம் நெகிழ்ந்து உள்ளார்.
இதுபற்றி பேசிய அவர்,“எப்போதும் நான் ஒன்று சொல்வேன். அது எனது அண்டர்-16 நிலைமைக்கு பின் சுரேஷ் ரெய்னா எனது வாழ்க்கையில் கடவுளைப் போல உள்ளே வந்து உதவிகளை செய்தார். அதன் காரணமாக ரஞ்சி கோப்பையில் தேர்வான என்னை நிறைய பேர் அடையாளம் கண்டனர். எனக்கு 13 வயது இருந்தபோது 14 வயதுக்கு உட்பட்ட முன்னோட்டங்களில் எனது கிரிக்கெட் வாழ்க்கை தொடங்கியது. அதன்பின் அண்டர்-16 நிலைமைக்கு முன்னேறிய நான் 7 போட்டிகளில் 50 விக்கெட்டுகளை எடுத்தேன்.
அப்போதுதான் முதல்முறையாக என்னை பற்றி தேர்வுக் குழுவினர் அறிந்தனர். அந்த தொடரில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறினாலும் பைனலில் தோற்றுப் போனோம். அந்த நேரத்தில் பயிற்சியாளர் ஞானேந்திரன் பாண்டே எனது பந்துவீச்சில் மகிழ்ச்சி அடைந்து வரும் காலங்களில் வாய்ப்பு தருகிறேன் என்று நம்பிக்கை ஊட்டினார். அதன்பின் மாநில அணிக்காக ரஞ்சி கோப்பையில் விளையாட இருந்த நான் 16 வயதை எட்டிய போது பயிற்சிக்காக வந்த சுரேஷ் ரெய்னாவை முதல் முறையாக பார்த்தேன்.
அன்றைய நாளில் பயிற்சியை முடித்துவிட்டு கிளம்பிய அவர் மீண்டும் மைதானத்திற்கு வந்து என்னிடம் என்னுடைய ரோல் பற்றி கேட்டார். அப்போது நான் ஒரு பந்து வீச்சாளர் என பதிலளித்த எனக்கு உடனடியாக அவர் அவருக்கு எதிராக பந்துவீசும் வாய்ப்பை வலைப்பயிற்சியில் கொடுத்தார். அந்த பயிற்சிக்குப் பின் எனது செயல்பாடுகளை பார்த்த அவர் “உனது பவுலிங் சிறப்பாக உள்ளது. வருங்காலங்களில் உறுதியாக உனக்கு நல்ல எதிர்காலம் உள்ளது” என்று கூறினார். சுரேஷ் ரெய்னா போன்ற ஒருவர் அப்படி ஒரு வார்த்தைகள் கூறியது எனக்கு நல்ல உணர்வுகளை கொடுத்தது.
அவரை போன்ற ஒரு மிகப்பெரிய வீரர் இப்படி கூறியது ஒருவேளை ஜோக்காக இருக்குமோ என்று கூட நினைத்தேன். அவர் கூறியதை அந்த சமயத்தில் என்னால் நம்ப முடியவே இல்லை. அதன்பின் ரஞ்சி கோப்பைக்கான உத்தரபிரதேச அணியில் எனது பெயரும் இடம்பெற்றது ஆச்சரியமாக இருந்தது. அதனால் ரஞ்சி கோப்பையில் வாய்ப்பு பெற்ற நான் அதன்பின் அண்டர்-19 உலக கோப்பையில் விளையாடினேன்” என்று நெகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now