
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரராக விளங்கும் ரெய்னா, ஒரு காலத்தில் ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்று வந்தார். இந்த நிலையில், 2020ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ரெய்னா ஓய்வு பெற்றார். அப்போது அவரது ஃபார்மும் சேர்ந்து அடி வாங்கியது.
இதனையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் ரெய்னாவை தக்கவைக்கவில்லை. சரி ஏலத்திலாவது ரெய்னா தேர்வு செய்யப்படுவார் என்று பார்த்தால் ரெய்னவை சிஎஸ்கே உள்ளிட்ட அனைத்து அணிகளும் புறக்கணித்துவிட்டன. இதனால் ரெய்னா ஏலத்தில் விலைப்போகவில்லை. இந்த நிலையில் ரெய்னா மீண்டும் விளையாட ஒரு வாய்ப்பு ஏற்பட்டது.
குஜராத் அணியில் இடம்பெற்றிருந்த ஜேசன் ராய், ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதனையடுத்து, அவருக்கு பதிலாக ரெய்னா சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரெய்னாவை தேர்வு செய்யாமல் ஆப்கானிஸ்தான் வீரர் ஒருவரை அந்த அணி தேர்வு செய்தது. இதனால் ரெய்னா ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.