
ஐபிஎல் 15ஆவது சீசன் வரும் 26ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அனைத்து அணிகளும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டுவரும் நிலையில், சாம்பியன் அணியான மும்பை இந்தியன்ஸ் அணியும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகிறது.
ஐபிஎல் மெகா ஏலத்தில் வழக்கம்போலவே ஏலத்தில் நிதானமாக இருந்து, தங்களுக்கு தேவையான தரமான வீரர்களை தட்டி தூக்கி வலுவான அணியை கட்டமைத்தது. ரோஹித், பும்ரா, சூர்யகுமார் யாதவ், பொல்லார்டு ஆகிய 4 வீரர்களையும் தக்கவைத்திருந்த மும்பை இந்தியன்ஸ் அணி, ஏலத்தில் எத்தனை கோடி கொடுத்தேனும், இஷான் கிஷனை எடுக்கும் உறுதியில் இருந்த நிலையில், அவரை ரூ.15.25 கோடி கொடுத்து எடுத்தது.
அணியில் ஏற்கனவே, சமகாலத்தின் சிறந்த ஃபாஸ்ட் பவுலரான பும்ரா இருக்கும் நிலையில், ஜோஃப்ரா ஆர்ச்சரையும் ஏலத்தில் எடுத்தது மும்பை அணி. பேபி ஏபி என்றழைக்கப்படும் தென்னாப்பிரிக்காவின் அண்டர் 19 ஸ்டார் பிளேயர் டிவால்ட் பிரெவிஸ் மற்றும் இந்திய அண்டர் 19 வீரர் திலக் வர்மா ஆகியோரையும் அணியில் எடுத்தது.