ஐபிஎல் 2022: பாட் கம்மின்ஸை புகழ்ந்த வெங்கடேஷ் ஐயர்!
பாட் கம்மின்ஸின் ருத்ரதாண்டவ பேட்டிங்கின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
15வது ஐபிஎல் தொடரின் 14வது லீக் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.
இதில் 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை துரத்தி களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பாட் கம்மின்ஸின் அபாரமான ஆட்டத்தின் மூலம் 16 ஓவர்களிலேயே இலக்கை எட்டி, 5 விக்கெட் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றியைப் பதிவு செய்தது.
Trending
இந்தநிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியுடனான இந்த வெற்றி குறித்து பேசிய கொல்கத்தா அணியின், வெங்கடேஷ் ஐயர், பாட் கம்மின்ஸின் அதிரடி ஆட்டத்தை வியந்து பாராட்டியுள்ளார்.
இது குறித்து பேசிய வெங்கடேஷ் ஐயர், “ஆடுகளம் பேட்டிங்கிற்கு சிறிதும் சாதகமாக இல்லை, எனவே எங்கள் அனைவருக்கும் இந்த ஆடுகளம் அதிக சவால் நிறைந்ததாகவே தெரிந்தது, ஆனால் பாட் கம்மின்ஸ் இதை சற்றும் மதிக்கவே இல்லை. இறுதி வரை களத்தில் இருந்தது மகிழ்ச்சியளிக்கிறது. பாட் கம்மின்ஸின் அதிரடி ஆட்டத்தை நம்பவே முடியவில்லை, அதுவும் இந்த ஆடுகளத்தில் இப்படி விளையாடுவது எளிதான விசயமே கிடையாது.
இறுதி வரை களத்தில் இருக்க வேண்டும் என்பதே எனது திட்டம். இதன் காரணமாகவே நான் பொறுமையாக விளையாடினேன். ஒரு பக்கம் நான் பொறுமையாக விளையாடினால், மறுமுனையில் களமிறங்கும் வீரர்கள் எவ்வித அழுத்தமும் இல்லாமல் முதல் பந்தில் இருந்தே அதிரடியாக விளையாட முடியும், இதற்காக தான் இந்த போட்டியில் நான் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினேன்” என்று தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now