
நடப்பு 15ஆவது ஐபிஎல் தொடரின் முதலாவது போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் கோலாகலமாக துவங்கியது. இந்த தொடரின் முதல் போட்டியில் ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதின. ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று துவங்கிய இந்த முதல் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார்.
அதன்படி களமிறங்கிய சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்களை மட்டுமே குவிக்க முடிந்தது. அதிகபட்சமாக தோனி 38 பந்துகளை சந்தித்து 50 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 28 பந்துகளை சந்தித்து 26 ரன்கள் குவித்தனர்.
பின்னர் 132 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணியானது 18.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா அணி சார்பாக அதிகபட்சமாக ரஹானே 44 ரன்களையும், சாம் பில்லிங்ஸ் 25 ரன்களையும் குவித்தனர். இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்ற ஸ்ரேயாஸ் ஐயர் 20 ரன்கள் குவித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இந்த முதல் போட்டியிலேயே சிஎஸ்கே அணி தோல்வியை சந்தித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.