ஐபிஎல் 2024: சூர்யகுமார் யாதவ் சதம்; ஹைதராபாத்தை வீழ்த்தியது மும்பை!
ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற 55ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு வழக்கம் போல் டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா இணை தொடக்கம் கொடுத்தனர்.
இருவரும் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் முதல் விக்கெட்டிற்கு 56 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதன்பின் 11 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் அபிஷேக் சர்மா தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய மயங்க் அகர்வாலும் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின் மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதத்தை நெருங்கிய டிராவிஸ் ஹெட் 7 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 48 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்ததுடன், அரைசதம் அடிக்கும் வாய்ப்பையும் தவறவிட்டார்.
Trending
அதன்பின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர வீரர்கள் நிதீஷ் ரெட்டி 20 ரன்களிலும், ஹென்ரிச் கிளாசென் 2 ரன்களிலும் மார்கோ ஜான்சென் 17 ரன்களுக்கும், ஷஃபாஸ் அஹ்மத் 10 ரன்களுக்கும், அப்துல் ஷமத் 3 ரன்களுக்கும் என அடுத்தடுத்து வரிசையாக சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து நடையைக் கட்டினர். இருப்பினும் அடுத்து களமிறங்கிய கேப்டன் பாட் கம்மின்ஸ் ஒரு சில பாவுண்டரிகளை அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கம்மின்ஸ் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 33 ரன்களைச் சேர்த்து ஃபினிஷிங் கொடுத்தார்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்களைச் சேர்த்தது. மும்பை இந்தியன்ஸ் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய கேப்டன் ஹர்திக் பாட்டியா மற்றும் பியூஷ் சாவ்லா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இதனைத்தொடர்ந்து 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அந்த அணியின் தொடக்க வீரர்கள் இஷான் கிஷன் 9 ரன்களுக்கும், ரோஹித் சர்மா 5 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய நமந்திரும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார்.
இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 31 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் இணைந்த சூர்யகுமார் யாதவ் - திலக் வர்மா இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழைப்பை தடுத்து நிறுத்தினர். பின் ஒரு கட்டத்திற்கு மேல் அதிரடியாக விளையாடிய இருவரும் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாச அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் இருவரது பார்ட்னர்ஷிப்பும் 100 ரன்களைக் கடந்தது.
இதில் தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்த சூர்யகுமார் யாதவ் ஐபிஎல் தொடரில் தனது இரண்டாவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அத்துடன் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சூர்யகுமார் யாதவ் 12 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 102 ரன்களையும், திலக் வர்மா 6 பவுண்டரிகளுடன் 37 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 17.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்து, நடப்பு ஐபிஎல் தொடரில் தங்களது நான்காவது வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now