Advertisement

பஞ்சாப் - ஹைதராபாத் போட்டிக்கு பின் ஐபிஎல் புள்ளி பட்டியலின் நிலை!

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் 5ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan April 10, 2024 • 13:17 PM
பஞ்சாப் - ஹைதராபாத் போட்டிக்கு பின் ஐபிஎல் புள்ளி பட்டியலின் நிலை!
பஞ்சாப் - ஹைதராபாத் போட்டிக்கு பின் ஐபிஎல் புள்ளி பட்டியலின் நிலை! (Image Source: Google)
Advertisement

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில்  டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்கள் டிராவிஸ் ஹெட் 22 ரன்களுக்கும், ஐடன் மார்க்ரம் ரன்கள் ஏதுமின்றியும், அபிஷேக் சர்மா 16 ரன்களுக்கும், ராகுல் திரிபாதி, ஹென்ரிச் கிளாசென் போன்ற வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.

பின்னர் இணைந்த நிதீஷ் ரெட்டி - அப்துல் சமத் ஆகியோர் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிதீஷ் ரெட்டி தனது முதல் அரைசதத்தைப் பதிவுசெய்ததுடன், 4 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 64 ரன்களைச் சேர்த்தார். பஞ்சாப் கிங்ஸ் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்களில் 29 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அதேசமயம் சாம் கரண் மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோரும் தங்கள் பங்கிற்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Trending


இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்களைக் குவித்தது. இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அந்த அணியின் நட்சத்திர வீரர்கள் ஷிகர் தவான், ஜானி பேர்ஸ்டோவ், பிரப்ஷிம்ரன் சிங், ஜிதேஷ் சர்மா, சாம் கரண், சிக்கந்தர் ரஸா என அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் இணைந்த ஷஷாங்க் சிங் - அஷுதோஷ் சர்மா ஆகியோர் அதிரடியாக விளையாடியதுடன், அணியின் வெற்றிக்காக கடைசிவரை போராடினர். 

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷஷாங்க் சிங் 46 ரன்களையும், அஷுதோஷ் சர்மா 33 ரன்களையும் சேர்த்த நிலையிலும், பஞ்சாப் கிங்ஸ் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்களை மட்டுமே சேர்த்தது. ஹைதராபாத் அணி தரப்பில் புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியின் வெற்றிக்கு காரணமாக இருந்த நிதீஷ் ரெட்டி ஆட்டநாயகன் விருதை வென்றார். 

 

இந்நிலையில் இப்போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் நடப்பு ஐபிஎல் தொடரில் 3ஆவது வெற்றியைப் பதிவுசெய்தது. இதன்மூலம் ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 3 வெற்றி, 2 தோல்விகள் என 6 புள்ளிகளைப் பெற்று ரன்ரேட் அடிப்படையில் 5ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதேசமயம் பஞ்சாப் கிங்ஸ் அணி 2 வெற்றி, 3 தோல்விகள் என 4 புள்ளிகளுடன் 6ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 

இப்பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 புள்ளிகளுடன் முதலிடத்திலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் தலா 6 புள்ளிகளுடன் ரன் ரேட் அடிப்படையில் 2,3 மற்றும் 4ஆம் இடங்களை பிடித்துள்ளன. மேலும் நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை விளையாடிய போட்டிகளில் ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ள மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பட்டியலின் கடைசி மூன்ற இடங்களில் தொடர்கின்றனர்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement