ஐபிஎல் 2025: சிஎஸ்கேவை பந்தாடி கேகேஆர் ஆபார வெற்றி!
சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 25ஆவது லீக் போட்டியில் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் அஜிங்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
சென்னையில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இப்போட்டிக்கான கேகேஆர் அணியில் மொயீன் அலியும், சிஎஸ்கே அணியில் ராகுல் திரிபாதி, அன்ஷுல் கம்போஜ் ஆகியோரும் லெவனில் சேர்க்கப்பட்டனர். இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய சிஎஸ்கே அணிக்கு டெவான் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா இணை தொடக்கம் கொடுத்தனர். ஆனால் இன்றைய ஆட்டத்திலும் சென்னை அணியின் பேட்டிங் படுமோசமாக இருந்தது.
Trending
அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் டெவான் கான்வே 12 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து ரச்சின் ரவீந்திரா 4 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய விஜய் சங்கர் ஓரளவு அதிரடியாக விளையாடும் முயற்சியில் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 29 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் ராகுல் திரிபாதி 16 ரன்னிலும், ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு ரன்னிலும், ரவீந்திர ஜடேஜா மற்றும் இம்பேக்ட் வீரராக களமிறங்கிய தீபக் ஹூடா ஆகியோர் ரன்கள் ஏதுமின்றியும், கேப்டன் எம்எஸ் தோனி மற்றும் நூர் அஹ்மத் ஆகியோர் தலா ஒரு ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர்.
இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷிவம் தூபே மூன்று பவுண்டரிகளுடன் 31 ரன்களையும், அன்ஷுல் கம்போஜ் 3 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் சென்னை சூப்பர் கின்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்களை மட்டுமே சேர்த்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய சுனில் நரைன் 3 விக்கெட்டுகளையும், வருண் சக்ரவர்த்தி மற்றும் ஹர்ஷித் ரானா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய கேகேஆர் அணிக்கு குயின்டன் டி காக் - சுனில் நரைன் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியதுடன் அடுத்தடுத்து பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்கவிட்டு அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். அதன்பின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த குயின்டன் டி காக் 3 சிக்ஸர்களுடன் 23 ரன்களைச் சேர்த்த கையோடு விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதன்பின் களமிறங்கிய ரஹானேவும் சிறப்பாக விளையாட அணியின் வெற்றியும் உறுதியானது. இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சுனில் நரைன் 2 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 44 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.
Also Read: Funding To Save Test Cricket
இருப்பினும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் அஜிங்கியா ரஹானே ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் என 20 ரன்களையும், ரிங்கு சிங் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 15 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேகேஆரின் சுனில் நரைன் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
Win Big, Make Your Cricket Tales Now