
உலகின் நம்பர் ஒன் பிரீமியர் லீக் டி20 தொடராக உருவெடுத்துள்ள ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் கடந்த மார்ச் 26ஆம் தேதியன்று கோலாகலமாக துவங்கி மே 29ஆம் தேதி வரை 65 நாட்கள் ரசிகர்களை மகிழ்வித்து நிறைவு பெற்றது. இந்த வருடம் லக்னோ மற்றும் குஜராத் ஆகிய புதிய அணிகளின் சேர்த்து 10 அணிகள் விளையாடியதால் 74 போட்டிகள் கொண்ட பிரம்மாண்ட ஐபிஎல் ரசிகர்களுக்கு நிறைய திரில்லான போட்டிகளை விருந்தாகப் படைத்தது.
அதில் கேப்டன்ஷிப் அனுபவமில்லாத ஹர்திக் பாண்டியா தலைமையில் முதல் வருடத்திலேயே லீக் மற்றும் நாக்-அவுட் சுற்றில் சொல்லி அடித்த குஜராத் டைட்டன்ஸ் இறுதிப்போட்டியில் அதுவும் சொந்த மண்ணில் ராஜஸ்தானை தோற்கடித்து கோப்பையை வென்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தி சரித்திரம் படைத்தது. மேலும் இந்த வருடம் வரலாற்றிலேயே முதல் முறையாக 1,000க்கும் மேற்பட்ட சிக்ஸர்கள் விளாசப்பட்டதால் அடுத்து ஐபிஎல் எப்போது தொடங்கும் என்று இப்போதே ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் அளவுக்கு இந்த வருட ஐபிஎல் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.
முன்னதாக ஐபிஎல் போட்டிகளை மைதானத்திற்கு சென்று பார்க்க முடியாத பெரும்பாலான ரசிகர்கள் தொலைக்காட்சி மற்றும் மொபைல் வாயிலாக நேரடியாக கண்டு களிக்கிறார்கள். அதை ஆரம்ப காலகட்டங்களில் சோனி குழுமம் ஒளிபரப்பி வந்த நிலையில் சமீப காலங்களில் ஸ்டார் இந்தியா நிறுவனம் ஒளிபரப்பி வந்தது. அந்த நிலைமையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழுமத்தின் ஐபிஎல் ஒளிபரப்பு ஒப்பந்தம் நடைபெற்று முடிந்த ஐபிஎல் 2022 தொடருடன் முடிந்தது. அதனால் அடுத்த ஒளிபரப்பு ஒப்பந்தம் அதாவது 2023 – 2027 காலகட்டத்திற்கான ஒப்பந்தத்தை கோருவதற்காக கடந்த மாதமே பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டது.