
கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற 13வது ஐபிஎல் தொடரின்போது பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் முதல் முறையாக ஐபிஎல் வரலாற்றில் லீக் சுற்றுகளோடு சென்னை அணி வெளியேறியது. அதன் பின்னர் தற்போது மீண்டும் இந்த வருட ஐபிஎல் தொடரில் பலமாக திரும்ப வந்திருக்கும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் 7 ஆட்டங்களில் ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் இரண்டாமிடம் வகிக்கிறது.
அதுமட்டுமின்றி தற்போது ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள இந்த சென்னை அணியானது இம்முறை இறுதிப் போட்டிக்கு செல்லும் அணியாக விளங்குகிறது. ஒட்டுமொத்தமாக சென்னை அணி சிறப்பாக செயல்பட்டாலும் கேப்டன் தோனியின் பேட்டிங் பார்ம் மட்டும் கவலைக்கிடமாக இருக்கிறது. ஏனெனில் இந்த தொடரில் 7 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் வெறும் 37 ரன்களை மட்டுமே குவித்துள்ளார். அதுமட்டுமின்றி அடுத்த ஆண்டு மெகா ஏலத்தின் போது அவருக்கு 40 வயது ஆகிவிடும். இதன் காரணமாக அவர் அடுத்த ஆண்டு விளையாடுவாரா ? என்பது சந்தேகம்தான்.
ஆனாலும் சென்னை அணியின் நிர்வாக இயக்குனர் காசிவிஸ்வநாதன் அடுத்த ஆண்டு தோனி விளையாடுவார் என்று உறுதி செய்துள்ளார். இருப்பினும் தோனிக்கு அடுத்து சென்னை அணியை வழிநடத்த போகும் கேப்டன் யார் ? என்ற கேள்வி அதிக அளவில் எழுந்து வருகிறது. அதுமட்டுமின்றி இந்த ஆண்டு சிஎஸ்கே அணி கோப்பையை ஜெயித்தால் நிச்சயம் தோனி அணியிலிருந்து வெளியேறுவார் என்று கூறப்படுகிறது.