
அயர்லாந்து - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று பெல்ஃபெஸ்டில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் நிக்கும் ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் ரஹ்மனுல்லா குர்பாஸ், உஸ்மான் கானி ஆகியோர் தலா ஒரு ரன்னுடன் வெளியேறி ஏமாற்றமளித்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த ஹஸ்மதுல்லா ஷாஹிதி - இப்ராஹிம் ஸத்ரான் இணை ஓரளவு தாக்குப்பிடித்து ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் ஸத்ரான் 17 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய நஜிபுல்லா ஸத்ரான், முகமது நபி ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். பின்னர் மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஹஸ்மதுல்லா ஷாஹிதியும் 36 ரன்கள் எடுத்த நிலையில் கரெத் டெலானி பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்களாலும் அயர்லாந்து பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் விக்கெட்டை இழந்தனர்.