IRE vs NZ, 2nd T20I: பிரேஸ்வெல் ஹாட்ரிக்; தொடரை வென்றது நியூசிலாந்து!
அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியது.
அயர்லாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி பெல்ஃபெஸ்டில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் மார்ட்டின் கப்தில் 11 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இதையடுத்து ஜோடி சேர்ந்த ஃபின் ஆலன் - தனே கிளெவர் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
Trending
பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஃபின் ஆலன் 20 பந்துகளில் 35 ரன்களை எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். கடந்த போட்டியில் அரைசதம் கடந்து அசத்திய கிளென் பிலீப்ஸும் 26 ரன்களோடு நடையைக் கட்டினார்.
ஆனாலும் மறுமுனையில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தனே கிளெவர் 39 பந்துகளில் தனது முதல் சர்வதேச டி20 அரைசதத்தைப் பதிவுசெய்தார். இதன்மூலம் நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்களைச் சேர்த்துள்ளது.
இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய அயர்லாந்து அணியின் தொடக்க வீரர்கள் பால் ஸ்டிர்லிங், கேப்டன் ஆண்டி பால்பிர்னி அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
ஆனால் 21 ரன்களில் பால் ஸ்டிர்லிங்கும், 10 ரன்களில் பால்பிர்னியும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் களமிறங்கிய வீரர்களாலும் நியூசிலாந்து பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அதிலும் 14ஆவது ஓவரை வீசிய மைக்கேல் பிரேஸ்வெல் ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றியும் அசத்தினார்.
இதனால் 13.5 ஓவர்களிலேயே அயர்லாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 91 ரன்களில் சுருண்டது. நியூசிலாந்து தரப்பில் இஷ் சோதி, மைக்கேல் பிரேஸ்வெல் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி வெற்றிக்கு உதவினர்.
இதன்மூலம் நியூசிலாந்து அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தியதுடன், 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியது.
Win Big, Make Your Cricket Tales Now