Advertisement

IRE vs NZ, 3rd ODI: ஸ்டிர்லிங், டெக்டர் சதம் வீண்; அயர்லாந்தை ஒயிட்வாஷ் செய்தது நியூசிலாந்து!

அயர்லாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றதுடன், 3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரைக் கைப்பற்றி அசத்தியது.

Advertisement
IRE vs NZ, 3rd ODI: NZ win by 1 run, they win the series 3-0
IRE vs NZ, 3rd ODI: NZ win by 1 run, they win the series 3-0 (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jul 15, 2022 • 11:16 PM

நியூசிலாந்து அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவருகிறது. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் நியூசிலாந்து அணி தொடரை வென்றுவிட்ட நிலையில் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடந்துவருகிறது.

Bharathi Kannan
By Bharathi Kannan
July 15, 2022 • 11:16 PM

இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. நியூசிலாந்து அணியின் அதிரடி தொடக்க வீரர் மார்டின் கப்டில் சிறப்பாக பேட்டிங் ஆடி சதமடித்தார். மற்றொரு தொடக்க வீரரான ஃபின் ஆலன் 33 ரன்கள் அடித்தார். வில் யங் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கேப்டன் டாம்லேதம் 30 ரன்கள் அடித்தார்.

Trending

ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் அபாரமாக பேட்டிங் ஆடிய மார்டின் கப்டில், 115 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ஹென்ரி நிகோல்ஸ் அதிரடியாக பேட்டிங் ஆடினார். பவுண்டரியும் சிக்ஸருமாக அடித்து அரைசதம் அடித்து சதத்தை நெருங்கிய நிகோல்ஸ் 79 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

54 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 79 ரன்களை குவித்து சதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார் நிகோல்ஸ். இறுதியில் கிளென் ஃபிலிப்ஸ் 30 பந்தில் 47 ரன்கள் அடித்தார். இதையடுத்து 50 ஓவரில் 360 ரன்களை குவித்த நியூசிலாந்து அணி, 361 ரன்கள் என்ற கடின இலக்கை அயர்லாந்துக்கு நிர்ணயித்தது.

இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய அயர்லாந்து அணியில் கேப்டன் ஆண்ட்ரூ பால்பிர்னி ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அவரைத் தொடர்ந்து வந்த ஆண்டி மெக்பிரைனும் 26 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

அதன்பின் ஜோடி சேர்ந்த பால் ஸ்டிர்லிங் - ஹேரி டெக்டர் இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியது. இதில் பால் ஸ்டிர்லிங் சதமடிக்க, அவரைத் தொடர்ந்து மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹேரி டெக்டர் சர்வதேச ஒருநாள் போட்டியில் தனது இரண்டாவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.

பின்னர் 120 ரன்களில் பால் ஸ்டிர்லிங் ஆட்டமிழக்க, 108 ரன்கள் சேர்த்திருந்த ஹேரி டெக்டரும் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். இறுதியில் அயர்லாந்து அணி வெற்றிபெற கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.

இறுதியில் அயர்லாந்து அணியால் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 359 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதன்மூலம் நியூசிலாந்து அணி ஒரு ரன் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தி த்ரில் வெற்றிபெற்றதுடன், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி ஒயிட் வாஷ் செய்தது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement