
ஐபிஎல் ஆரம்பித்த முதல் சீசனில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த மகேந்திர சிங் தோனி இன்று அந்த பொறுப்பில் இருந்து விலகினார். மேலும், புதிய கேப்டனாக அவரே ரவீந்திர ஜடேஜாவை தேர்வு செய்ததாக முறைப்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது. நாளை மறுதினம் முதல் போட்டியில் சென்னை அணி விளையாடவுள்ள நிலையில் வெளியாகிவுள்ள இந்த அறிவிப்பு, ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இதனிடையே, தோனியின் முடிவு குறித்து சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் பேட்டியளித்துள்ளார். அதில், "தோனியின் முடிவை நாங்கள் எப்போதும் மதித்து வருகிறோம். அவர் எங்களுக்கு ஒரு தூணாக இருக்கிறார். தொடர்ந்து அப்படியே இருப்பார். கேப்டன் பொறுப்பை ஜடேஜாவிடம் ஒப்படைக்க இது சரியான நேரம் அவர் உணர்ந்ததால் அதை செய்துள்ளார். இந்த முடிவை எடுத்தது அவர்தான். நிர்வாக கூட்டத்தில் இந்த முடிவை எங்களிடம் தெரிவித்தார். ஒரு கேப்டன் என்ற முறையில் எப்போதும் சிஎஸ்கே மீது நிறைய அக்கறை கொண்டுள்ள தோனி, அணியின் நலன் கருதி இந்த முடிவை எடுத்துள்ளார்.
தோனியின் முடிவு எங்களுக்கு ஆச்சர்யம் கொடுக்கவில்லை. ஏனென்றால், இதுதொடர்பாக நாங்கள் இதற்கு முன்பே விவாதித்துள்ளோம். கடந்த ஆண்டே இந்த விவாதம் வந்தபோது ஜடேஜாவிடமும் இதனைத் தெரிவித்தோம். ஜடேஜாவும் சர்வதேச கிரிக்கெட்டில் தன்னை வெகுவாக முன்னேற்றி உள்ளதால் இதுவே சரியான தருணம் என தோனி உணர்ந்திருக்கலாம். அதையே இன்றைய நிர்வாக கூட்டத்தில் வெளிப்படுத்தினார்.