ஒரு வீரராக என்னுடைய நிலை எனக்கு தெரியும் - ஷிகர் தவான்!
தொலைக்காட்சிகளில் செய்திகளைப் பார்க்க மாட்டேன், செய்தித்தாள் படிக்க மாட்டேன் என இந்தியத் தொடக்க வீரர் ஷிகர் தவன் கூறியுள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 31 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
கடந்த வருடம் இலங்கை சென்ற இந்திய அணியின் கேப்டனாகச் செயல்பட்ட ஷிகர் தவன், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் தேர்வானார். டி20 உலகக் கோப்பை அணியில் இடம்பெறாத ஷிகர் தவனால் இனிமேல் இந்திய டி20 அணிக்குத் தேர்வாக முடியுமா என்பது சந்தேகமே.
Trending
ரோஹித் சர்மா, கே.எல். ராகுல், இஷான் கிஷன், ருதுராஜ் எனத் தொடக்க வீரர்களுக்கான இடங்களுக்குப் பலத்த போட்டி உள்ளது. இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் தன்னுடைய இடத்தை பலப்படுத்திக்கொள்ள வேண்டிய நிலைமையில் உள்ளார் ஷிகர் தவன். அவருக்கு 36 வயதாகி விட்டதால் ஒருமுறை தோற்றாலும் வெளியேறும் வாய்ப்பு உருவாகி விடும். அந்தளவுக்குப் போட்டி அதிகமாகிவிட்டது.
சமீபத்தில் நடைபெற்ற விஜய் ஹசாரே போட்டியில் 5 இன்னிங்ஸில் 56 ரன்கள் மட்டுமே எடுத்தார் தவான். அவருக்குப் போட்டியாளராக மாறியுள்ள ருதுராஜ் கெயிக்வாட், 5 ஆட்டங்களில் 4 சதங்கள் உள்பட 603 ரன்கள் குவித்து இந்திய அணிக்குத் தேர்வாகிவிட்டார்.
ரோஹித் சர்மா, கே.எல். ராகுலிடம் போட்டியை எதிர்கொண்ட ஷிகர் தவன் அடுத்ததாக ருதுராஜ், இஷான் கிஷனிடமும் மோதி ஜெயிக்க வேண்டிய நிலைமையில் உள்ளார். டி20 அணியிலிருந்து நீக்கப்பட்டாலும் ஷிகர் தவனுடைய ஒருநாள் கிரிக்கெட்டுக்கான இடத்தை யாரும் கேள்வி கேட்க முடியாது. கடந்த வருடம் இந்தியாவில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் 3 ஆட்டங்களில் இரு அரை சதங்கள் எடுத்தார். இலங்கையில் 3 ஆட்டங்களில் 1 அரை சதம் எடுத்தார்.
இந்திய டி20 அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ள ஷிகர் தவன், இந்திய அணியில் மீண்டும் இடம்பெற்றது குறித்து கூறுகையில், “இந்திய அணிக்காக என்னுடைய சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்த மட்டுமே எனக்குத் தெரியும். அதற்காகச் சரியாகத் தயாராக வேண்டும் என எண்ணுவேன். என்னுடைய அனுபவம், நம்பிக்கையின் காரணமாக என்னால் நன்றாக விளையாட முடியும் என்பதை அறிவேன்.
நான் தொலைக்காட்சிகளில் செய்திகளைப் பார்க்க மாட்டேன், செய்தித்தாள் படிக்க மாட்டேன். என்மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. ஒரு வீரராக என்னுடைய நிலை எனக்குத் தெரியும். என்னுடைய ஆட்டம் பற்றிய தெளிவு எனக்கு உண்டு. எனவே அமைதியைக் கடைப்பிடிப்பேன். இது வாழ்க்கையின் ஓர் அங்கம்.
எல்லோருக்கும் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். இது புதிதல்ல. இது எனக்கு முதல்முறையாக நடக்கவில்லை. கடைசியும் அல்ல. இது என்னை மேலும் வலுவான வீரராக மாற்றுகிறது. என்னால் நல்ல உடற்தகுதியுடன் இருக்க முடிந்தால் என் அனுபவத்தைக் கொண்டு நிறைய ரன்கள் அடிக்க முடியும்” என்று தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now