
இலங்கை அணிக்கு எதிராக தனது சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா மிகப்பெரிய வெற்றியை ருசித்து உள்ளது. மார்ச் 4ஆம் தேதி அன்று பஞ்சாப் மாநிலம் மொகாலியில் துவங்கிய இப்போட்டியில் 100 போட்டிகளில் விளையாடிய 12ஆவது இந்திய வீரராக சாதனை படைத்த நட்சத்திரம் விராட் கோலிக்கு சிறப்பு தொப்பியை பரிசளித்து பிசிசிஐ கௌரவப்படுத்தியது.
இதை அடுத்து துவங்கிய இப்போட்டியில் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித் சர்மா முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். இதையடுத்து களமிறங்கிய இந்தியா தனது முதல் இன்னிங்சை 574/8 என்ற மிகப் பெரிய ஸ்கோரை எடுத்திருந்த போது டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.
இந்தியா சார்பில் அதிகபட்சமாக இலங்கை பந்துவீச்சாளர்களை பந்தாடி கடைசி வரை அவுட்டாகாமல் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த ரவீந்திர ஜடேஜா 175* ரன்களை குவித்தார். அவருடன் அதிரடியாக பேட்டிங் செய்த ரிஷப் பண்ட் 97 ரன்களும் ரவிச்சந்திரன் அஷ்வின் 61 ரன்களும் எடுத்தனர்.