இளம் வீரரை புகழ்ந்து தள்ளும் முகமது கைஃப்; காரணம் இதுதான்!
சூர்யகுமார் யாதவ் இன்னிங்ஸின் முதல் பந்தையே, 100 பந்துகள் ஆடி களத்தில் செட்டில் ஆகிவிட்ட பேட்ஸ்மேனை போல ஆடுவதாக முகமது கைஃப் புகழாரம் சூட்டியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இந்திய அணிக்குள் நுழைந்தவர் சூர்யகுமார் யாதவ்.
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் அறிமுக வீரராக தேர்வு செய்யப்பட்ட சூர்யகுமார் யாதவ், அந்த தொடரில் அபாரமாக ஆடினார். இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் அறிமுக வீரராக களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார்.
Trending
இதையடுத்து நேற்று நடந்த முதல் டி20 போட்டியிலும் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்து அசத்தினார். ஒவ்வொரு போட்டியிலும் அபாரமாக விளையாடி வரும் சூர்யகுமார் யாதவ் இந்திய அணியில் தனக்கான இடத்தை உறுதி செய்துவிட்டார்.
தொடர்ச்சியான தனது சிறப்பான பேட்டிங்கால் அனைவரையும் கவர்ந்துள்ள சூர்யகுமார் யாதவை முன்னாள் வீரர்கள் பலரும் புகழ்ந்துவருகின்றனர்.
அந்த வகையில் சூர்யகுமார் யாதவ் குறித்து பேசியுள்ள முகமது கைஃப்,“சூர்யகுமார் யாதவ் முதல் பந்தையே, ஏற்கனவே 100 பந்துகளை ஆடி செட்டில் ஆகிவிட்டதை போல ஆடுகிறார். அவருக்கு பதற்றமோ, எந்தவித சந்தேகமோ இல்லாமல், மிகத்தெளிவாகவும் ஆடுகிறார்.
உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடி தேசிய அணியில் இடம்பெற்ற வீரர் சர்வதேச அளவில் அபாரமாக ஆடுவதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now