
இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அங்கு அந்த அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. அதில் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் வரலாற்றின் முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்று சரித்திரம் படைத்த கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து சந்தித்து வருகிறது.
இந்த தொடரில் ஜூன் 2ஆம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் துவங்கி நடைபெற்ற முதல் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இங்கிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1 – 0* (3) என ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது.
அதை தொடர்ந்து இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 2வது போட்டி ஜூன் 10ஆம் தேதி டிரென்ட் பிரிட்ஜ் நகரில் தொடங்கி நடைபெற்றுவருகிறது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இருப்பினும் அப்போட்டியில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் கரோனா பாதிக்கப்பட்டு தனிமைப் படுத்திக் கொண்டதால் டாம் லாதம் கேப்டனாக செயல்பட்டார். அதைத் தொடர்ந்து பேட்டிங்கை துவக்கிய நியூசிலாந்து முதல் போட்டியை போலல்லாமல் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்து 553 ரன்கள் குவித்தது.