
ஷார்ஜா மைதானத்தில் நேற்று நடைபெற்ற இரண்டாவது தகுதிச்சுற்று போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், ஈயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு நுழையும் என்பதனால் இரு அணிகளுமே மிக சிறப்பான போராட்டத்தை இந்த போட்டியில் தந்தது.
முதலில் விளையாடிய டெல்லி அணியானது 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. பின்னர் 136 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணியும் அதற்கேற்றார்போல் சிறப்பான தொடக்கத்தை பெற்றது.
12.2 ஓவர்களில் 96 ரன்களுக்கு தங்களது முதல் விக்கெட்டை இழந்தது. சிறப்பாக விளையாடிய வெங்கடேச ஐயர் 41 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினார். பின்னர் 46 ரன்கள் எடுத்து கில் ஆட்டமிழந்து வெளியேற மிடில் ஆர்டரில் சற்று தொய்வு ஏற்பட்டது.