
பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையே ராவல்பிண்டியில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. 5 நாட்கள் ஆட்டத்தில் மொத்தமாகவே 14 விக்கெட்டுகள் மட்டுமே விழுந்தது. முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்பிற்கு 476 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி 459 ரன்களை குவித்தது. ஆஸ்திரேலிய அணியின் முதல் இன்னிங்ஸே கடைசி நாள் ஆட்டத்தின் முதல் செசனில் தான் முடிந்தது. அதன்பின்னர் 2வது இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் இமாம் உல் ஹக் மற்றும் அப்துல்லா ஷாஃபிக் ஆகிய இருவருமே 77 ஓவர்கள் பேட்டிங் ஆடி முடித்தனர். இதையடுத்து போட்டி டிராவில் முடிந்தது.
முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 162 ஓவர்களும், ஆஸ்திரேலிய அணி 140 ஓவர்கள் பேட்டிங் ஆடின. 2வது இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 77 ஓவர்கள் பேட்டிங் ஆடியது. இந்த போட்டியில் மொத்தமாக வீசப்பட்ட 379 ஓவர்களில் வெறும் 14 விக்கெட்டுகள் மட்டுமே விழுந்தன. ஆஸ்திரேலிய அணி வெறும் 4 விக்கெட் மட்டுமே வீழ்த்தியது.