
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணியானது 3-0 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றிய நிலையில், இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று கொழும்புவில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றன.
மேலும் கடந்த 2023 ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்குப் பிறகு கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோரு இந்திய அணிக்காக மீண்டும் ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இந்தப் போட்டியில் குல்தீப் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினால், முன்னாள் ஆல்-ரவுண்டர் இர்ஃபான் பதானை பின்னுக்குத் தள்ளி, இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களில் பத்தாவது இடத்தை பிடிப்பார்.
அந்தவகையில், இந்திய அணிக்காக கடந்த 2017ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமான குல்தீப் யாதவ், இதுநாள் வரை 103 ஒருநாள் போட்டிகளில் 100 இன்னிங்ஸில் விளையாடி 168 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். அதேசமயம் முன்னாள் ஆல் ரவுண்டரான இர்ஃபான் பதான் இந்திய அணிக்காக 120 ஒருநாள் போட்டிகளில் 118 இன்னிங்ஸ்களில் விளையாடி 173 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.