
இந்திய அணி நடப்பு ஆசிய கோப்பையின் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணிக்கு எதிராகப் பெற்ற வெற்றி, இந்திய அணி நிர்வாகத்திற்கு மிகப்பெரிய நம்பிக்கையை அளித்து இருக்கிறது. இந்த வெற்றி இந்திய நிர்வாகத்திற்கு அளித்த நம்பிக்கையைத் தாண்டி, இந்திய அணி குறித்த பலரது பார்வையையும் மாற்றியிருக்கிறது. உண்மையில் இந்த ஒரு வெற்றி 10 வெற்றிக்கு சமமான தாக்கத்தை, விளைவுகளை இந்திய கிரிக்கெட் மீது ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தப் போட்டிக்கு முன்பாக இந்திய அணி பேட்டிங் துறை மட்டும் அல்லாமல் பந்துவீச்சு துறையும் மிகவும் கேள்விக்கு உட்பட்ட ஒன்றாகவே பலரது பார்வையில் இருந்து வந்தது. இந்தியாவை விட ஒரு சிறிய வாய்ப்பு வெற்றிக்கு பாகிஸ்தானுக்கு அதிகம் என்று பலரும் பேசினர். பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் வரை பாகிஸ்தான் அணிக்கே வெற்றி வாய்ப்பு கொஞ்சம் அதிகம் என்று கூறியிருந்தார்.
காரணம் பாகிஸ்தான் சில மாதங்களாக இலங்கையில் விளையாடி வருவதும், தொடர்ச்சியாக அவர்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் செயல்பாடும் விதத்தினாலும், அவர்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் நேற்று பாகிஸ்தான் அணிக்கு எதிரான இந்திய அணியின் ஒட்டுமொத்த செயல்பாடு, ஒரு மிகப்பெரிய திறமையின் வெடிப்பு போல இருந்தது. இந்திய அணி ஒட்டுமொத்தமாக எழுச்சி பெற்று, பாகிஸ்தான் அணியை எந்த இடத்திலும் எழவிடாமல் முடக்கி விட்டார்கள். உலகக்கோப்பை முன் இருப்பதால் இந்த வெற்றி மிக முக்கிய ஒன்றாக இந்திய அணிக்கு பார்க்கப்படுகிறது.