
மும்பை பார்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடக்க வீரராக டெல்லி அணியில் மந்தீப் சிங்,டேவிட் வார்னர் ஆகியோர் களமிறங்கினர்.
மந்தீப் சிங் 5 பந்தை சந்தித்து டக் அவுட்டாகி வெளியேறினார். மிட்செல் மார்ஷ் 10 ரன்கள் எடுத்திருந்த போது சென் அபார்ட் பந்துவீச்சில் அவரிடமே பிடிப்பட்டு ஆட்டமிழந்தார். ஒரு முனையில் விக்கெட்டுகள் இழந்தாலும் டேவிட் வார்னர் தனது வழக்கமான அதிரடி ஷாட்களை ஆடி ரன் குவித்தார். இதனால் டெல்லி அணியின் ஸ்கோர் கிடுகிடுவென உயர்ந்தது. ஸ்ரேயாஸ் கோபால் வீசிய ஒரு ஓவரில் ரிஷப் பண்ட் ஹாட்ரிக் சிக்சர் மற்றும் பவுண்டரி அடித்து அசத்தினார். ஆனால் அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார். 16 பந்துகளில் அவர் 26 ரன்கள் அடித்திருந்தார்.
இதன் பின்னர் டேவிட் வார்னர், ரொமன் போவெல் ஆகியோர் சேர்ந்து ஹைதராபாத் அணி பந்துவீச்சை பதம் பார்த்தனர். இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தது. வார்னர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 92 ரன்கள் அடிக்க, போவெல் 67 ரன்களை விளாசினார். உம்ரான் மாலிக் வீசிய அதிவேக கடைசி ஓவரில் போவெல் 19 ரன்களை விளாசி இருந்தார். இதனால் டெல்லி அணி 3 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்தது.