இலங்கையில் நடைபெற்றுவரும் 4ஆவது சீசன் லங்கா பிரீமியர் லீக் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 17ஆவது லீக் ஆட்டத்தில் ஜாஃப்னா கிங்ஸ் - கலே டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜாஃப்னா கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஜாஃப்னா அணிவீரர்கள் எதிரணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். இதில் நிஷன் மதுஷங்கா 2, ரஹ்மனுல்லா குர்பாஸ் 0, கிறிஸ் லின் 4, சோயிப் மாலிக் 0, டேவிட் மில்லர் 5, கருணரத்னே 7 என அதிரடி வீரர்கள் அனைவரும் ஒற்றையிலக்க ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.
அந்த அணியில் அதிகபட்சமாக துனித வல்லலகே 22 ரன்களையும், திஷாரா பெரேரா, மஹீஷ் தீக்ஷனா தலா 13 ரன்களையும் சேர்த்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஜாஃப்னா கிங்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 89 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கலே அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய கசுன் ரஜிதா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.