
இந்தியாவைச் சேர்ந்த நட்சத்திர முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி இந்தியாவுக்காக 3 விதமான உலக கோப்பைகளை வென்று கொடுத்த கேப்டன் ஆவார். கேப்டன்ஷிப் அனுபவமில்லாத போதிலும் 2007இல் தம்மிடம் வழங்கப்பட்ட பொறுப்பில் அனைத்து வீரர்களையும் அற்புதமாக வழிநடத்தி டி20 உலகக் கோப்பையை வென்று கொடுத்த அவர் 2011இல் சொந்த மண்ணில் 28 வருடங்கள் கழித்து இந்தியாவுக்கு உலக கோப்பையை வென்று கொடுத்தார்.
அதேபோல் 2013இல் தாம் வளர்த்த விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற இளம் வீரர்களை வைத்து இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபியை வென்று காட்டிய அவர் அதிரடியான பேட்ஸ்மேன், சிறப்பான விக்கெட் கீப்பர் உட்பட பல பரிணாமங்களை கொண்டவர்.
ஐபிஎல் தொடரிலும் சென்னை அணிக்காக 4 கோப்பைகளை வென்று போட்டிகளின் அடிப்படையில் வெற்றிகரமான கேப்டனாக சாதனை படைத்துள்ள அவர் ஒட்டுமொத்த கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த கேப்டனாக போற்றப்படுகிறார். அவரது தலைமையில் வாய்ப்பு பெற்று விளையாடிய நிறைய இளம் வீரர்கள் நாளடைவில் உலகத்தரம் வாய்ந்த வீரர்களாக உருவெடுத்துள்ளார்கள். சொல்லப்போனால் இன்றைய இந்திய அணியில் விளையாடும் பாதிக்கும் மேற்பட்ட வீரர்கள் அவரது வாய்ப்பு மற்றும் ஆதரவால் நட்சத்திரங்களாக வளர்ந்தவர்கள் என்றே கூறலாம்.