
சர்வதேச கிரிக்கெட், ஐபிஎல் என அனைத்திலும் வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்தவர் மகேந்திர சிங் தோனி. சர்வதேச கிரிக்கெட்டில் டி20 உலக கோப்பை (2007), ஒருநாள் உலக கோப்பை (2011) மற்றும் சாம்பியன்ஸ் டிராபி (2013) ஆகிய 3 விதமான ஐசிசி டிராபியையும் வென்ற ஒரே கேப்டன் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் தோனி.
ஐபிஎல்லில் சிஎஸ்கே அணிக்கு 4 முறை கோப்பையை வென்று கொடுத்திருக்கிறார். ரோஹித் சர்மாவுக்கு (5 முறை) அடுத்து அதிக முறை கோப்பையை வென்ற கேப்டன் என்ற பெருமைக்குரியவர் தோனி. தோனி தலைமையில் சிஎஸ்கே அணி ஒரேயொரு சீசனில் மட்டுமே பிளே ஆஃபிற்கு செல்லவில்லை. மற்ற அனைத்து சீசன்களிலும் பிளே ஆஃபிற்கு தகுதிபெற்ற சிஎஸ்கே அணி, 9 முறை இறுதிக்கு முன்னேறி அதில் 4 முறை டைட்டிலை வென்றுள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டில் ஆல்டைம் பெஸ்ட் கேப்டன்களில் ஒருவர் தோனி. அபாரமான கிரிக்கெட் மூளைக்காரர். ஆட்டத்தை போக்கை கணிக்கும் அவரது திறன், களவியூகம், வீரர்களை கையாளும் விதம், நெருக்கடியான சூழல்களை மிகக்கூலாக கையாளும் விதம், ஃபீல்டிங் செட்டப், உள்ளுணர்வின் படி அவர் எடுக்கும் திடீர் முடிவுகள் என அனைத்துமே பிரமிப்பை ஏற்படுத்தும்.